சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (17.06.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக குருதி கொடையாளர் தினம் 2025 நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, குருதி கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கி விழா பேரூரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு, 66 முறை இரத்த தானம் செய்துள்ளதை பாராட்டி “தொடர் தன்னார்வ குருதி கொடையாளர்“ என்கின்ற சிறப்பு விருதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்விற்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
உலக குருதி கொடையாளர் தினம் 2025 ஒவ்வொரு ஆண்டும் ஜீன் திங்கள் 14ஆம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான உலக குருதி கொடையாளர் தினம் இன்றைக்கு மிக சிறப்பாக அனுசரிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த உலக குருதி கொடையாளர் தினத்தை பொருத்த வரை வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு தினமாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் ஒவ்வொரு ஆண்டும் குருதி கொடையாளர்களை பாராட்டுவதோடு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது, தன்னார்வலர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சிறப்பிப்பது என்கின்ற வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்ட எல்லைக்குள் குருதி கொடை தருபவர்களை தொடர்ந்து பாராட்டி சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களோடு, அறிவிக்கப்பட்ட மூன்று சிறப்புக்குரிய அறிவிப்புகள் இந்த தினத்தில் இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
2025-26 மானியக்கோரிக்கை அறிவிப்பு செயல்படுத்துதல்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 2009-2010ஆம் ஆண்டு நிதி ஆண்டில், ஒரு அறக்கட்டளை ஒன்று எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசு அறக்கட்டளை ஒன்று தொடங்குவதற்கு ரூ.5 கோடி நிதி ஆதாரத்தை தந்தார்கள். அந்த வகையில் அந்த ரூ.5 கோடிக்கான நிதி ஆதாரத்தின் மூலம் அதில் கிடைக்கப்பெறுகிற வட்டித் தொகையை கொண்டு, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்திற்கு ஆண்டுதோரும் அவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசின் Power Finance Corporation-லிருந்து ரூ.25 கோடி நிதி தொகுப்பு நிதியாக வைப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதிலிருந்து கிடைக்கிற நிதி ஆதாரத்தைக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, 2025-2026ஆம் நிதி ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் சிறப்புக்குரிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியாக மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் 7,618 குழந்தைகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைக்கு அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி 7,618 எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான மற்றும் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்துகின்ற வகையில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாது சட்டமன்றத்தில் அறிவித்த இன்னொரு சிறப்பு எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் நன்னடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில், இதனால் ஏற்படுகிற அபாயங்களை எடுத்துரைக்கும் வகையிலான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு 50 கல்லூரிகளில் புதிதாக செஞ்சுருள் சங்கங்கள் (Red Ribbon Clubs) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தொடக்கமாக இன்றைக்கு 11 சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எச்ஐவி (எய்ட்ஸ்) மற்றும் பால்வினை தொற்று குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவியரிடத்தில் ஏற்படுத்தி அவர்களிடையே நன்னடத்தையை உருவாக்குகின்ற முயற்சி என்கின்ற வகையில் இது இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு மூன்றாவது அறிவிப்பாக ஒன்று, வளரிளம் பருவத்தினருக்கு தேவையான எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதற்கு தமிழ்நாட்டில் இருக்கிற 9,830 பள்ளிகளில் பயில்கிற 8,9 மற்றும் 11ஆம் வகுப்பில் பயில்கிற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படவிருக்கிறது. இந்த பயிற்சி என்பது நிச்சயம் வளரும் பருவத்தினரிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வளரும் பருபத்தினரிடையே எச்ஐவி (எய்ட்ஸ்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி என்கின்ற பயிற்சி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு இன்றைக்கு 11 பள்ளிகளில் பயிற்சி திட்டம் குறிப்பாக வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் முறையாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதோடு மட்டுமல்லாது தொடர்ந்து குருதிக் கொடை அளிக்கின்ற வாழ்நாள் சாதனையாளர்களை அழைத்து அவர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு சுய ஒழுக்கம் மிக்க தன்னார்வலர்கள் இன்று விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலர் எங்களுக்கு விடுபட்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இத்துறை இயக்குநர் ஆர்.சீத்தாலட்சுமி இ.ஆ.ப. மாவட்டம் அளவில் இதற்காக கணக்கெடுப்பு நடத்தி யார், யார் தொடர்ந்து எத்தனை முறை குருதிக் கொடை தந்திருக்கிறார்கள் என்று முழுமையாக, அந்தந்த மாவட்டங்களிலிருக்கின்ற மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகத்துறையிடமிருந்து கேட்டுப் பெற்று வருகின்ற அக்டோபரில் விடுபட்ட அனைவருக்கும் கேடயங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஆக அந்தவகையில் இன்றைய உலக குருதிக் கொடையாளர் தினத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஒரு மிகச்சிறந்த 3 புதிய அறிவிப்புகளோடு இந்த நாள் மிகச்சிறப்பாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனை தொடர்பான கேள்விக்கு:
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை ஒரு வட்டார அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். 5 செவிலியர்கள் பணியில் இருக்கிறார்கள். 12 இதர பணியாளர்களும் பணியில் இருக்கிறார்கள்.
பணியாளர்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. போதுமான அளவிற்கு மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் பணியில் இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடைபெற்று எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட துறை மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் அவர்களை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தோம். தூய்மை பணியாளர்கள் சிகிச்சைகள் நடக்கும் இடத்தில் உதவுவதற்கு எந்த விதத்திலாவது சென்றிருப்பார்கள். விசாரித்ததில் அவர் ஏதோ உதவுவதற்கு வந்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என்கின்ற வகையில் அவரைக் கொண்டு அப்பணி செய்தது என்பது தவறு என்கின்ற வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவர் உடனடியாக இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் இருந்த செவிலியர் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் அவர்களையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். இன்றைக்கு அந்தப் பணியும் முடிந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 299 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் இருக்கின்றது. சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்து அவரவர் கடமையினை செய்வார்கள் என்கின்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலை மருந்து இருப்பு தொடர்பான கேள்விக்கு:
இன்றைக்கு கூட ஒரு தினசரி பத்திரிக்கையில் மஞ்சள் காமாலை மருந்து அரசு மருத்துவமனைகளில் போதிய இருப்பு இல்லை என்கின்ற செய்தி வந்திருக்கிறது. அது உண்மையான செய்தி அல்ல. கடந்த வாரம் இன்னொரு ஆங்கில நாளிதழில் தனியார் மருத்துவமனைகளில் மஞ்சள் காமாலைக்கான ஹெபிடேடஸ் பி (Hepatitis B) என்னும் மருந்து தட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு இருக்கிறது என்று ஆங்கில செய்தி பத்திரிக்கைகளில் வெளியிட்டிருந்தார்கள். அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை எந்தவிதமான மருந்து தட்டுப்பாடு இருக்க கூடாது என்கின்ற வகையில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அனைத்து அவசியமான மருந்துகள் இன்றைக்கு போதுமான அளவிற்கு கையிருப்பில் இருக்கின்றது. குறிப்பாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) நிர்வாக இயக்குநர் மருத்துவமனைகளில் மருந்து இருப்பு எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு தேவை போன்ற பட்டியலை கொண்டு மருந்து இருப்பு பணியினை மிகச் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹெபிடேடஸ் பி (Hepatitis B) என்னும் மருந்து தற்போது 6,21,320 டோஸ் கையிருப்பில் இருக்கின்றது. இந்த மருந்து இன்னும் 8.5 மாதம் காலத்திற்கு தேவையினை பூர்த்தி செய்யும். அதேபோல் பென்டாவலன்ட் தடுப்பூசி 5,52,100 எனும் வகையில் கையிருப்பில் உள்ளது, இது 2.5 மாதத்திற்கு தேவையான வகையில் கையிருப்பில் உள்ளது. ஆக எதிர்கால அளவிற்கு தேவையான அளவில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆர்.சீத்தாலட்சுமி,இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராயச்சி இயக்குநர் மரு.சங்குமணி மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.