ஆரல்வாய்மொழி : குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில் உலக பல்லுயிர் பெருக்க தினத்தை அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் வன ஊழியர்கள், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினர்.
உலக பல்லுயிர் பெருக்க தினம் இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம். மே 22ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லுயிரின பாதுகாப்பு நாடு’ என்பதுதான். மரம், செடி, கொடி, பாலூட்டி, ஊர்வன, பறப்பன, நீர், நில வாழ் என பல்வேறு உயிரினங்கள் வாழத்தகுதியான நிலப்பரப்பு நம்முடைய நிலப்பரப்பு ஆகும். உலக பல்லுயிர் பெருக்க நிகழ்வில் மாணவ மாணவிகள் காளிகேசம் வனப்பகுதிக்கு வருகை புரிந்தனர். அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் ஊழியர்கள் மாணவ மாணவிகளை வரவேற்றனர்.
பின்னர் வன ஊழியர்கள் மாணவ மாணவிகளுக்கு பல்லுயிர் பெருக்க நாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் வன உயிரினங்களை பாதுகாத்தல், இயற்கையை பேணுதல், காடுகளின் முக்கியத்துவம், அழிவின் விளிம்பில் உள்ள வன உயிரினங்கள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
பின்னர் மாணவ மாணவிகளை காளிகேசம் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மாணவ மாணவிகள் இயற்கை அழகை ரசித்ததோடு பல்வேறு வகையான விலங்கு இனங்கள், பூச்சி இனங்கள்,தாவர இனங்கள் மற்றும் பறவை இனங்கள் ஆகியவற்றை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழகத்தில் அரிதாக காணப்படும் மலை இருவாச்சி பறவைகளை காளிகேசம் வனப்பகுதியில் பார்த்தது சிறப்பாக அமைந்தது. இயற்கை பவுண்டேஷன் அமைப்பினர் இந்த வாய்ப்பை மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சுபாகரன் ஒருங்கிணைத்தார்.