சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டலில் வெற்றிகள் பல காணும் நம் திமுகவின் ‘முப்பெரும் விழா’, சென்னையில் செப்டம்பர் 17 கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பெரியார் விருது பெறவுள்ள பாப்பம்மாள் பாட்டி, பேரறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ள அறந்தாங்கி மிசா ராமநாதன், முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருதுக்கு தேர்வாகியுள்ள திமுக தீர்மானக்குழுத் தலைவர் கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருதைப் பெறவுள்ள வி.பி.ராசன் ஆகிய மூத்த முன்னோடிகளுக்கு அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். பவள விழா காணும் திமுக, இன்னும் பல நூறாண்டுகள் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கு துணை நிற்கும் வகையில் அதனை மென்மேலும் வலிமையாக்கிட அயராது உழைப்போம்.