சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் 140 ஆண்டுகள் பழமையானது. 1882ல் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி, மெட்ராஸ் நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். 1883ல் பீப்பிள்ஸ் பார்க் என்ற பகுதியில் இருந்து 3.14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீபவுசபதி அனந்த கஜபதி ராஜூ கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
இது, இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இதை ராபர்ட் சிசோமால் ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக் கலையால் வடிவமைக்கப்பட்டு, நம்பெருமாள் செட்டியாரால் 1888 முதல் தொடங்கி 1890ல் கட்டி முடிக்கப்பட்டது. 1888 ஜனவரியில் நடந்த, நகர மக்கள் கூட்டத்தில், மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டிடத்திற்கு விக்டோரியா மகாராணி பொது மண்டபம் என பெயரிடப்பட்டது.
2021-22ம் ஆண்டு பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் பழமை வாய்ந்த விக்டோரியா கட்டிடம் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணிகள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் 20.3.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
இந்த விக்டோரியா மஹால் முழு கட்டிடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, முழு கூரையினையும் சீரமைப்பு, வெளிப்புறம் மற்றும் உட்புறம் மறு சீரமைப்பு, மரத்தளம் மர படிக்கட்டுகள் மறுசீரமைப்பு, தரை மற்றும் முதல் தளத்தினை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலை நயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, இயற்கையை ரசிக்கும் வகையில் புல்தரைகள் அமைக்கும் பணி, தரைத் தளத்தில் அருங்காட்சியகம், நிர்வாக அலுவலகம் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் தளத்தில் விஐபி நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகவும் பயன்படுத்தபட உள்ளது. இந்த பணிகள் இன்னும் 18 மாதங்களில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தற்போது இந்த மஹாலின் மேற்கூரை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. அதேபோல், சுவர்களை சீரமைப்பது, சுண்ணாம்பு பூச்சு வேலை, நிலநடுக்கம் வந்தால் அதனை தாங்கும் வசதி உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனை தவிர்த்து மரத்திலான படிக்கட்டுகள் 3ல் 2 முடிவடைந்துள்ளது. மரத்திலான பழைய தரைத்தளம் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் விஐபிக்கள் மற்றும் பொதுமக்களுக்கென தனித்தனியாக கழிவறை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காதவாறு பிரம்மாண்டமான முறையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மஹாலானது, பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும். விக்டோரியா பொதுக்கூடத்திற்கான புனரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்த மியூசியத்திற்கென 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு மியூசியத்தின் உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பணிகளை 18 மாதங்களில் முடிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளின் துரிதமான பணிகளால் இப்பணி 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னரே முடிவடைய வாய்ப்புள்ளது. இப்பணிகள் முன்னரே முடிந்தால் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் மஹாலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புனரமைப்பு பணிகள் சுமார் 48% முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* விக்டோரியா மஹால் முதல் தளத்தை, தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
* புனரமைப்பு பணி, உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
* அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் மஹாலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.