சென்னை: பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றி அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அமைச்சுப் பணியில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை என்று நடைமுறையில் உள்ளது.
இதனை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பள்ளி கல்வி இயக்குநர் அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். இக் கோரிக்கையை பரிசீலித்த அரசு, அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றி உத்தரவிட்டுள்ளது.