கூடலூர் : கூடலூர் அருகே யானையை பார்த்து பயந்து, சமயோசிதமாக மரத்தில் ஏறி பதுங்கி வடமாநில தொழிலாளர்கள் உயிர் தப்பிய வீடியோ காட்சி வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், திகிலையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் – ஊட்டி சாலையில் மேல் கூடலூர் அருகே சில்வர் கிளவுட் தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டம் உள்ளது. இதனை ஒட்டி அடர் வனப்பகுதி உள்ளதால் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இந்த தோட்டங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகின்றன.
இங்கு நிரந்தர தொழிலாளர்களுடன் வட மாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். பசுந்தேயிலை பறித்தல், தேயிலை செடிகள் பராமரித்தல், காப்பி தோட்டம் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் இங்குள்ள 1-வது டிவிஷன் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக சென்று உள்ளனர். பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென காட்டு யானை ஒன்று அப்பகுதியில் வந்தது. யானையை பார்த்ததும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் 2 தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் சமயோசிதமாக யானையிடம் இருந்து தப்பிக்க உயரமான மரத்தின் மீது ஏறி உள்ளனர். ஆனாலும், சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அப்பகுதியில் யானை ஆக்ரோஷமாக நடமாடி உள்ளது. உயரமான மரத்தில் ஏறி தப்பிய தொழிலாளர்கள் யானை அங்கிருந்து சென்றதும் கீழே இறங்கி வந்தனர்.
உயரமான மரத்தில் தொழிலாளி ஏறி பதுங்கி இருப்பதையும் அதற்கு கீழே யானை நடமாடுவதையும் மற்றொரு தொழிலாளி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியையும், திகிலையும் ஏற்படுத்தி வருகிறது.