வி.கே.புரம் : மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மதுபோதையில் தொழிலாளி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம், வராகபுரத்தைச் சேர்ந்தவர் முருகையா மகன் முத்துக்குமார் (42). தச்சு தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். முத்துக்குமார் அடிக்கடி மது குடித்ததை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமாரை விட்டு அவரது மனைவி பிரிந்து மகன்களுடன் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று விட்டார். இந்நிலையில் குடும்பம் நடத்த வருமாறு முத்துக்குமார் தனது மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை.
மேலும் முத்துக்குமார் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.பலமுறை மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் முத்துக்குமார் மதுபோதையில் சிவந்திபுரம் செல்போன் டவரில் ஏறினார்.
அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விகேபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், முத்துக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அம்பை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முத்துக்குமாரை பத்திரமாக மீட்டு அவருக்கு அறிவுரை கூறினர். நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி ரகளை செய்த சம்பவம் சிவந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.