Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செங்கோட்டில் வீடு புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த தொழிலாளி கைது

*வாகன சோதனையில் சிக்கினார்

திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த தறி தொழிலாளி, வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி(58). இவரது கணவர் சௌந்தரராஜன் இறந்து விட்டார். மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த 21ம் தேதி, சுமதி வீட்டை பூட்டி விட்டு, குருசாமிபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். மறுநாள் காலை வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம்- பக்கத்தினர் திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, விசாரித்தனர்.

இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, வெள்ளி காசுகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வேகமாக வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், காவல்நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், அந்த நபர் சுமதி வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் குமாரபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் கணேசன்(46) என்பது தெரியவந்தது. தறித்தொழிலாளியான கணேசன், தனது கூட்டாளியுடன் சேர்ந்து சுமதி வீட்டில் கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையடித்த நகைகளை விற்பதற்காக எடுத்துச் செல்லும் வழியில், போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார். இதனையடுத்து, அவரிடமிருந்து 10 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கணேசனை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு விசாரித்து, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி கணேசன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொள்ளை வழக்கில், தலைமறைவான அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.