திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம் கல்லணை பகுதிகளில், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு 100 நாள் வேலை தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 100 நாள் வேலைதிட்டத்தினை நிறுத்துவதற்கான சதி வேலைகளை மோடி அரசு செய்து வருகிறது. இந்த திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின்பு ஊதியம் வழங்கப்படவில்லை.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் மட்டும் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ரூ.1,500 கோடிக்கு மேலாக சம்பளம் நிலுவையில் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் ஊதியம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினேன். அவர் பதில் அளிக்கவில்லை. பெண்களின் நிலையை உணராதவராக உள்ளார் என்றார்.