சேலம்: சேலத்தில் வேலைக்கு போகாமல் சுற்றிய போலீஸ் ஏட்டுவை பிடித்து சென்ற மனைவி, வெந்நீர் ஊற்றி கழிவறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் பழனிவேல் (49). கடந்த ஆண்டு நவம்பர் முதல் வேலைக்கு செல்லவில்லை. குடிபழக்கத்திற்கு அடிமையான அவர், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் விட்டோடியாக அறிவிக்கப்பட்டார்.
அதற்கான நகலை அவரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ள நிலையில் லைன்மேட்டில் உள்ள காவலர் குடியிருப்பிலும் இல்லை. இந்நிலையில் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் ஒன்று கிடைத்தது. ஏட்டு பழனிவேல் அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார், விட்டோடி நோட்டீசுடன் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரது மனைவியிடம் கேட்டபோது, அவர் வீட்டில் இல்லை என தெரிவித்ததுடன், இரவு நேரத்தில் வந்துள்ளீர்கள், காலையில் வாருங்கள் என்றார்.
அப்போது, அவரிடம் விட்டோடி நோட்டீசைதான் கொடுக்க வந்துள்ளோம் என்றனர். அவர் வீட்டிற்கு இன்னும் வரவில்லை என்றார். சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை.
ஆனால் கழிவறை உள்ளே இருந்து கதவை தட்டியபடி `அய்யா என்னை காப்பாற்றுங்கள்’ என்ற சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது, அங்கு ஏட்டு பழனிவேல், அரைகுறை ஆடையுடன் பின்பகுதி முழுவதும் காயத்துடன் இருந்தார். நடக்க முடியாத நிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ‘புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து என்னை அழைத்து வந்து வீட்டில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதுடன், சுடுதண்ணீரை ஊற்றி விட்டனர்’ என கதறினார்.
‘கழிவறையிலேயே என்னை அடைத்து வைத்து சாப்பாடு கூட சரியாக கொடுக்கவில்லை. கழிவறையில் வரும் தண்ணீரை குடித்தேன்’ என்றார். அவரை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
* பெண்களுடன் தொடர்பு மனைவி, குழந்தைகளை கொடுமை செய்த ஏட்டு
இந்த விவகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. `ஏட்டு பழனிவேல் மதுபழக்கத்திற்கு அடிமையானதுடன் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை. ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று தான் ஒரு போலீஸ் எனவும் கட்டிங் வேண்டும் எனவும் கேட்டு வாங்கி மது குடிப்பார். வீட்டுக்கு வந்தால் ஆடைகளை அவிழ்த்து போட்டு இருப்பார். பெண் குழந்தை இருக்கும் வீட்டில் இப்படி இருக்கலாமா? என கண்டிக்கும் மனைவியை அடித்து கொடுமை படுத்துவார். மேலும் பெண்களுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு சுற்றி வந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே அவரது மனைவி நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் மனு அளித்துள்ளார். போலீசார் அவரை அழைத்து விசாரிக்கும்போது, ஒழுங்காக இருப்பேன் என கூறிச் செல்லும் அவர் மீண்டும் மது குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் குடும்பத்தினர் வறுமைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தாங்க முடியாத வேதனையில் இருந்த மனைவி கடந்த 8ம் தேதி அவரை பிடித்து வந்து வீட்டில் அடைத்து வைத்தாலாவது திருந்துவாரா? என்ற எண்ணத்தில் வீட்டில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.