பெரம்பூர்: மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதமாக ரூ.10 லட்சம் மோசடி செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவை சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவரிடம் கடந்த 2023ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவந்த பெருமாள்சாமி (33) என்பவர், மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
ஆனால் இதன்பிறகு வேலை வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அஜித்குமார், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின்படி, தேவர்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பெருமாள்சாமி சென்னை ஓட்டேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு ஆய்வாளருக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே அஜித்குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் அளித்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை பெருமாள்சாமி பணிபுரியும் புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வேலைவாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் பெருமாள்சாமியை பணியிடை நீக்கம் செய்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவிட்டார்.