Tuesday, July 15, 2025
Home செய்திகள்Showinpage 10 ஆண்டாக பணி நடப்பது எய்ம்சா? விண்வெளி நிலையமா? ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நாங்களே நிதி ஒதுக்குகிறோம்: அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

10 ஆண்டாக பணி நடப்பது எய்ம்சா? விண்வெளி நிலையமா? ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நாங்களே நிதி ஒதுக்குகிறோம்: அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

by Karthik Yash

சேலம்: மதுரையில் 10 ஆண்டாக பணி நடப்பது எய்ம்சா? விண்வெளி நிலையமா?. ஒன்றிய அரசு திட்டங்களுக்கு மாநில அரசான நாங்கள் நிதி ஒதுக்குகிறோம். அப்படி இருக்கையில் எப்படி உங்கள் திட்டங்களை மடை மாற்ற முடியும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.1,649 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 1.01 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசியதாவது: நான் எங்கு சென்றாலும், அன்போடு, உறவோடு, உரிமையோடு நீங்கள் என்னை வரவேற்கிறீர்கள். முதலமைச்சராக மட்டும் என்னை பார்க்காமல், உங்களில் ஒருவராக, உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாக பார்க்கிறீர்கள். அன்பை பொழிகிறீர்கள். இதையெல்லாம் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. திமுக அரசின் செல்வாக்கை பார்த்து வயிறு எரிகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர், அரசியலை மட்டும் பேசிக்கொண்டு சென்றிருந்தால், இங்கு நான் பதில் பேசியிருக்க மாட்டேன். அரசியல் கூட்டத்தில் பேசியிருப்பேன். ஆனால் ஆட்சியில் குறை சொல்லி, எதுவும் செய்யவில்லை, எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, சும்மா வெறும் அறிவிப்புகளாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை செய்து கொண்டு போயிருக்கிறார். அதனால், கட்டாயத்தின் அடிப்படையில் நான் அதற்கு விளக்கம் சொல்கிறேன். அமித்ஷாவின் பேச்சிலேயே தன்னுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்.

“ஒன்றிய பாஜ அரசு அளிக்கும் திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கான நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்கிறது திமுக அரசு” என்று அவர் பேசியிருக்கிறார். ஆனால், உண்மை என்ன?. குடிநீர் திட்டமாக இருந்தாலும் சரி, வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்று மாநில அரசுதான் கூடுதல் பணம் வழங்குகிறது. பிரதமரின் பெயர் வைத்திருக்கும் திட்டங்களுக்கே 50 சதவீதத்திற்கு மேல் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து, அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லாம் படையப்பா சினிமா பார்த்திருப்பீர்கள்.

அதில் ஒரு காட்சி வரும், “மாப்பிள்ளை அவர்தான், ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று ஒரு டயலாக் இருக்கும். அதுபோல்தான், ஒன்றிய அரசு பெயரிலான திட்டங்களுக்கும் நாம் நிதி வழங்கிக்கொண்டு வருகிறோம். இந்தநிலையில் எந்த அடிப்படையில் நாம் மடைமாற்றம் செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்?. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய பாஜ அரசுதான், தமிழ்நாட்டிற்கான எந்த சிறப்புத்திட்டத்தையும் தராத அரசு. மிக சில திட்டங்களுக்கு ஒதுக்கும் பணமும் முழுமையாக வந்து சேருவது இல்லை.

ஆனால், உள்துறை அமைச்சர் அப்படியே பிளேட்டை திருப்பி போடுகிறார். நான் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கேட்கிறேன். மதுரை வந்தீர்களே, 10 ஆண்டுக்கு முன்பு உங்கள் அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது என்று சென்று பார்த்தீர்களா?. அதே மதுரையை சுற்றி, நாம் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலகத்தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என்று ஏராளமான பணிகளை முடித்திருக்கிறோம். இதுதான் பாஜ மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.

பத்தாண்டுகளாக தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்பதற்கு, அது எய்ம்ஸ் மருத்துவமனையா? இல்லை, விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?. ஒழுங்காக நிதி ஒதுக்கியிருந்தால், இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாமே?. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டை குறை சொல்லி நீங்கள் பேசலாமா. மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு என்று நீங்கள் செய்த ஒரே ஒரு சிறப்புத்திட்டத்தை சொல்லுங்கள். 9 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாங்களும் இடம் பெற்றிருந்தோம். எங்களின் சாதனைகளை நான் பட்டியல்போட்டு பலமுறை சொல்லியிருக்கிறேன். சட்டமன்றத்திலும் பதிவு செய்திருக்கிறோம்.

மதுரைக்கு வந்த அமித்ஷா இப்படி பேசினால், மதுரையின் தொன்மையை நிராகரிப்பது போல இன்னொரு ஒன்றிய அமைச்சரான ஷெகாவத் பேசியுள்ளார். கீழடியில், அள்ள அள்ள குறையாமல், அத்தனை சான்றுகளை கண்டுபிடித்து அறிவியல் ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை பற்றி உலகளாவிலான ஆய்வகங்களில் சோதனைக்குட்படுத்தி நாம் தான் முதல் ரிசல்ட்டை வெளியிட்டோம். அதனை அங்கீகரித்து ஒரு வார்த்தையாவது பேசினார்களா?.

தமிழர்களுடைய தொன்மைகளை மறைக்கவும், அழிக்கவும் ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடியவர், இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு துணிச்சல் இல்லாமல், அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அவர்கள் அருகில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்படி தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரான அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களும் இவர்கள் கூட்டணியை புறக்கணிக்கிறார்கள். புறக்கணித்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ஏற்கனவே ஒருமுறை வெளிப்படையாக கூட்டணி வைத்தீர்கள். தமிழ்நாட்டிற்கான ஒரு சிறப்புத்திட்டத்தையாவது அப்போது கேட்டு பெற்றீர்களா? இல்லை. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோனபோது எதிர்த்து ஒரு கேள்வி கேட்டீர்களா?, கேட்கவில்லை.

தமிழ்நாட்டில் பாஜ.,வின் ‘ப்ராக்சி’ ஆட்சி நடந்தபோதும் எதிர்த்து குரல் எழுப்பவில்லை. இப்போதும், தமிழ்நாட்டில் அடுத்து பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவும், மற்றவர்களும் நேரடியாகவே சொல்கிறார்கள். அதைப்பார்த்தும் எதையும் பேசமுடியாமல் வாய்மூடி இருக்கிறார்கள். சுய நலத்திற்காக, சுய லாபத்திற்காக சொந்த கட்சியையே அடமானம் வைத்தபிறகு, எப்படி பேசமுடியும்?. ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உங்களிடம் ஏமாறமாட்டார்கள். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்.

நான் உறுதியோடு சொல்கிறேன். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நெருக்கடிகளை மீறி நெருப்பாற்றில் நீந்தி தமிழ்நாட்டை உயர்த்தி வரக்கூடிய திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறீர்கள். இப்போது இருப்பதுபோலவே 2026லும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். எப்போதும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழர்களுடைய
தொன்மைகளை மறைக்கவும், அழிக்கவும் ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடியவர், இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு துணிச்சல் இல்லாமல், அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அவர்கள் அருகில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

* 1 கி.மீ நடந்து சென்று மக்களை சந்தித்தார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே காரிலிருந்து இறங்கி ஓமலூர்-சேலம் ரோட்டில் உள்ள பயணியர் மாளிகை வரை 1 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்தார். சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் மக்களை சந்தித்து கை குலுக்கி உரையாடினார். மேலும், குழந்தைகளை எடுத்து கொஞ்சி பெயர் வைத்து மகிழ்ந்தார்.

* நெல் கொள்முதல் விலை ரூ.2,500 ஆக உயர்வு
அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். விவசாயிகள், ஒரு குவிண்டால் ெநல்லுக்கு இனி ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்றாற்போல் சாதாரண ரகத்திற்கு இனி ரூ.131ம், சன்ன ரகத்திற்கு ரூ.156ம் என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இதனால், சாதாரண ரகம் ரூ.2,500க்கும், சன்ன ரகம் ரூ.2,545க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

* மாணவர்கள் கோரிக்கை முதல்வர் உடனடி நடவடிக்கை
சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு ரோடு ஷோ நடத்தினார். அப்போது, புதுச்சாம்பள்ளி அரசுப்பள்ளி மாணவர்கள் யாழ்மொழி மற்றும் அநிருத்தன் ஆகியோர், பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வரும் தங்களது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தினர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை சம்பந்தப்பட்ட பள்ளியில் உதவி பொறியாளர் வள்ளி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், மாணவர்களின் கோரிக்கைப்படி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவும், கழிவறை வசதிகள் ஏற்படுத்தவும் தேவையான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து அனுப்பி வைத்தனர். மாணவர்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

* உங்கள் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த திட்டம் என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நீங்கள் ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். இந்த நிலைமையில், 2004ம் ஆண்டையும், 2025ம் ஆண்டையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறீர்கள். அன்றைக்கு இருந்த பட்ஜெட் என்ன?. இப்போது இருக்கக்கூடிய பட்ஜெட் என்ன?. அன்றைக்கு தங்கம் ஒரு பவுன் 5 ஆயிரம் ரூபாய். இன்றைக்கு 71 ஆயிரம் ரூபாய். 2004ம் ஆண்டு பணமும், இப்போது இருக்கக்கூடிய பணமும் ஒன்றா?’ என்றார்.

* மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (12ம்தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவின் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். முதல்வர் திறந்து வைத்த நீரானது, 20 அடி உயரம், 60 அடி அகலம் கொண்ட மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்தது. அப்போது, ‘‘நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மிக அதிக அளவில் மகசூல் பெற்று பயனடைய வேண்டும்’ என்று விவசாயிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நேற்று காலை முதல் வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கனஅடியாக உயர்த்தப்படும். மேலும், குறுவை சாகுபடியின் தேவைக்கேற்ப அளவு உயர்த்தி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதன் காரணமாக மின் நிலையங்களில் 460 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi