Monday, July 14, 2025
Home செய்திகள் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்!

ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்!

by Porselvi

ஈடுபாட்டுடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றியின் சிகரத்தை எட்டும். ஈடுபாடு இல்லாதபோது முயற்சிகள் எல்லாம் தோல்வியைத்தான் தழுவும். ஆகவே எதைச் செய்வதாயினும் அதில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அப்பொழுதுதான் உங்களுடைய முழு ஆற்றலும் அதில் வெளிப்படும்.முழு ஈடுபாடு என்பது உடலும்,மனமும் ஒருங்கிணைந்து செய்வதைக் குறிக்கும்.சில நேரங்களில் உடல் ஒரு வேலையைச் செய்யும். ஆனால் அதில் மன ஈடுபாடு இருக்காது. மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். அத்துடன் மன சலிப்புடன் செய்யும் செயலில் வெறுப்புத்தான் மிளிரும். வெற்றிகளைப் பெற வாய்ப்பே இல்லை.சில சமயங்களில், மனம் ஒரு வேலையை செய்ய நினைக்கும். ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்காது. உதாரணமாக, அதிகாலை எழ வேண்டும் என்று மனதில் தீர்மானம் இருக்கும்.ஆனால் அவ்வாறு காலையில் எழுந்து பணியைத் தொடங்குவதற்கு உடல் மறுத்து அடம் பிடிக்கும். உடலும், மனமும் இணைந்து செயல்படும்போது, அதில் ஆன்ம பலமும் சேர்ந்திருந்தால், நீங்கள் வெல்வதை யாராலும் தடுக்கமுடியாது.

போதுமென்று நினைத்து விட்டால் வளர்ச்சி இல்லை.போதுமென்று நினைக்கா விட்டால் மகிழ்ச்சி இல்லை என்பார்கள். நமக்கு வளர்ச்சியும் வேண்டும். மகிழ்ச்சியும் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தானே நினைக்கின்றீர்கள். முயற்சி செய்வதையே மகிழ்ச்சியாக கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே முயற்சி செய்ய வேண்டும். அதாவது எதைச் செய்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். உற்சாகமாக செய்ய வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். புதிய தளிர்கள் வளரும் போதுதான் செடி அழகாகவும், வளமாகவும் இருக்கின்றது. அதுபோலதான் புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது தான் மனிதர்கள் அழகாகவும் முன்னேற்றமாகவும் இருக்கிறார்கள். ஆகவே வெற்றிப் புன்னகை மலர்வதற்கு வியர்வையைச் சிந்திக் கொண்டே இருங்கள்.உழைப்பின் வேர்கள் கசப்பானவை என்றாலும் அதன் கனிகள் இனிப்பானவை. உழைக்கும் தேனீக்களைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருப்பவர்களை வறுமை நெருங்குவதுமில்லை. அவர்கள் கவலை என்கிற வலையில் அகப்படுவதும் இல்லை.

வாழ்க்கை முழுவதும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்,அதுதான் சாதனைக்கான பாதை என்ற விதியை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.ஆம்! சோதனைகள் இல்லாமல் வென்றால் அது சாதனையே அல்ல, ஒரு விதை முளைத்து வெளியே வருவதற்கு எத்தனை சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. நீர் கிடைக்க வேண்டும். காற்று கிடைக்க வேண்டும். சூரிய ஒளி வேண்டும்.இவை எல்லாமும் கிடைத்தாலும் மண்ணில் இருக்கும் போது பூச்சிகளோ, எறும்புகளோ அதை சேதப்படுத்தி விடாமல் இருக்க வேண்டும். இதைவிட பெரும் சவால் என்னவென்றால் விதையிலிருந்து வெளியே வருகின்ற முளை, மண்ணை முட்டி மோதி வெளியே வந்து தலையை நீட்ட வேண்டும். ஆம்அடுக்கடுக்கான சவால்களை எதிர்த்தே வாழ்க்கை பயணத்தை தொடங்க வேண்டும் என்பது தான் நிதர்சன உண்மை. இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது கூட எனக்குப் பிரச்னை கொடுக்காதே என்று வேண்டுவதை விட, எல்லா பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் துணிவையும், ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் கொடு என்று வணங்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.உங்கள் பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று எந்த பெற்றோரையும் கேட்டுப் பாருங்கள். மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது இதுபோன்ற கண்ணுக்குப் பிரகாசமான துறைகளிலோ ஜொலிக்க வேண்டும் என்று தான் பதில் சொல்வார்கள். ஆனால் யாரும் தப்பித் தவறிக்கூட என் பிள்ளை விவசாயியாக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் எம்.டெக். பட்டப்படிப்பைப் படித்து துணைப் பேராசிரியராக பணியாற்றிய ஒரு பெண், அந்தப் பதவியைத் விட்டுவிட்டு, முழு நேர விவசாயி ஆகியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அவர்தான் வல்லாரி சந்திராகர் என்ற 27 வயது பெண். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

2012 ஆம் ஆண்டில், எம்.டெக் பட்டம் பெற்றவர் இவர். இவரது படிப்புக்கு ஏற்ப ராய்ப்பூரில் துர்கா கல்லூரியில் துணைப் பேராசிரியர் பணியும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் கிராமத்துக்கு வரும் வல்லாரி, அங்குள்ள விவசாயிகள் இன்னும் பழைய காலத்து விவசாய முறைகளையே பின்பற்றி வருவதை கவனித்தார். அதனால்தான் போதிய வருமானம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் உணர்ந்தார். விவசாயிகளிடம் நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிய விசய ஞானம் ஏதும் இல்லை என்பதையும், நவீன முறைகளுக்கு அவர்கள் மாறத் தயாராக இல்லை என்பதையும் கண்டறிந்தார். இவற்றையெல்லாம் மாற்றத் தாமே விவசாயியாவது என்று முடிவு எடுத்தார். வேறு எந்தப் பணியையும் விட விவசாயமே மேன்மையானது என்பது அவரது கருத்து. விவசாயத்தின் மீது உள்ள நாட்டத்தால் பக்பாஹா மாவட்டத்திலுள்ள தனது 27 ஏக்கர் நிலப்பரப்பில் 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.இவரது குடும்பத்தில் அதுவரை யாரும் விவசாயத்தில் ஈடுபட்டதில்லை, ஆரம்ப காலகட்டத்தில், விவசாய நுட்பங்கள் மற்றும் விளைச்சலை சந்தைப் படுத்துவது போன்றன இவருக்குச் சற்று சிரமமாகவே இருந்திருக்கின்றன. கடின உழைப்பும், இடைவிடாத அர்ப்பணிப்பும் விவசாயத்துக்குத் தேவை என்றாலும் அது தரும் மனநிறைவு வேறு எந்த பணியில் முழுமையாக கிடைக்காது என்பதே இவரது கருத்து. புதிய தொழில்நுட்பங்கள் விவசாயத்திலும் வந்து விட்டதால் விவசாயம் முன்னைப் போலக் கடுமையானதாக இல்லை, எளிதாக மாறி வருகிறது என்றும் இவர் தெரிவிக்கின்றார். நவீன தொழில்நுட்பங்களை பொருத்தியதால், தரமான காய்கறி விளைச்சல் இவருக்கு சாத்தியமானது. பச்சை மிளகாய், பாகற்காய், வெள்ளரி போன்ற காய்கறிகள் அதிகம் பயிராகின்றன. இவரது நிலத்தில் விளைந்த காய்கறிகள் இந்தூர், பெங்களூர், நாக்பூர், டெல்லி போன்ற நகரங்களில் சிறப்பாக விற்பனை ஆகின்றன. துபாய் இஸ்ரேல் போன்ற அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

விவசாயிகளுக்கும், புதிதாக விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும் மேன்மையான தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன வேளாண்கருவிகளைப் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் இவர் எடுக்கிறார். பல விவசாயிகளுக்கும் தம்முடைய கிராமத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றார். விற்பனை செய்யப்படும் காய்கறியின் தரம் மிகவும் முக்கியம் என இவர் வலியுறுத்துகிறார்.பணிகளுக்கு இவர் செலவிடும் நேரம் அலாதியானது. தனது விவசாய பணிகள் அனைத்தையும் மாலை 5 மணிக்குள் நிறைவேற்றி விடுவார். பின்னர் கிராமத்து மாணவிகள் 40 பேருக்கு ஆங்கிலம் மற்றும் கணிப்பொறி அறிவியல் பாடங்களை இலவசமாக கற்றுத் தருகிறார். சக விவசாயிகளின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைக்கிறார். இவரது வெற்றியால் ஈர்க்கப்பட்ட அக்கம்பக்கத்து கிராம மக்களும் இவரது ஆலோசனைகளைப் பின்பற்ற ஆவலுடன் முன்வருகின்றனர். தம்முடைய அனுபவ அறிவை கிராமத்து குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு அவர்களது தகவல் தொடர்பு ஆற்றலையும் வளர்த்து வருகிறார்.

தற்போது அவருக்கு ஏழு உதவியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் வல்லாரியின் எண்ணங்கள் நிறைவேற உறுதுணையாக இருக்கின்றார்கள் ஆரம்பத்தில் இவரது முயற்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. ‘படித்த முட்டாள்’ என பட்டப் பெயரிட்டு இவரை அக்கம் பக்கத்தினர் அழைத்தனர். அதையெல்லாம் வல்லாரி பொருட் படுத்தவேயில்லை. ஆனால் தற்போது இவரை ஏளனம் செய்தவர்களே வியப்புடன் பார்க்கின்றார்கள்.இவரது வளர்ச்சியை மனதார வாழ்த்துகிறார்கள். தான் படித்த கல்வி அறிவை விவசாயம் என்ற மேன்மையான உன்னத துறையில் பயன்படுத்தி சாதித்து வருகிறார் வல்லாரி. ஈடுபாடு என்கிற விதை, செயல் என்னும் நிலத்தில் விதைத்தால் தான் வெற்றி என்ற கனியை சுவைக்க முடியும். ஆம்! இவரைப் போலவே செயற்கரிய செயலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அதன் மூலம் வாழ்க்கையில் வாகை சூடி மகிழுங்கள்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi