ஊட்டி : திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த கேத்தி காவல் நிலைய கட்டிடம் மீது மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதனை சுற்றியுள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி சுமார் ஒரு வாரம் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் 100க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் சாலைகள், கட்டிடங்கள் மீது விழுந்தன.
இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பருவமழையின் ேபாது கேத்தி காவல் நிலையம் மீது கற்பூர மரம் விழுந்து சேதமடைந்தது. இதனை தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த நிலையில், அந்த கட்டிடம் மீதும் ராட்சத கற்பூர மரம் விழுந்ததால் கட்டிடம் சேதமானது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. காவல் நிலையத்தை சுற்றிலும் அதிக மரங்கள் வளர்ந்துள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் கூறுகையில்:
கேத்தி போலீஸ் நிலைய கட்டிடத்தின் மீது கடந்த பருவமழையின் போது மரம் விழுந்து பலத்த சேதமடைந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் கேத்தி போலீஸ் நிலையம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று அடுத்த ஒரு சில நாட்களில் திறப்பு விழா நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு கடந்த மாத இறுதியில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வந்தது.
மே 27ம் தேதி பெய்த கனமழையால் மீண்டும் மரம் விழுந்து கட்டிடம் மீண்டும் சேதமானது. மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கும் முன்பாக, காவல் நிலைய வளாகத்தை சுற்றியுள்ள மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரெயில்வே நிலத்தில் உள்ள மரங்களுக்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி கொடுத்து விட்டனர் முதல் கட்டமாக 9 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள 36 மரங்களை அகற்ற வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் அனுமதி கிடைத்தவுடன் மரங்கள் அகற்றி கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றனர்.