*அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
நிலக்கோட்டை : ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 1256 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 1,256 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார்.
தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கி 2024-25ம் ஆண்டில் ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்து.
திண்டுக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் 26, ஆத்துார் ஊராட்சியில் 77, அக்கரைப்பட்டி ஊராட்சியில் 46, அம்பாத்துரை ஊராட்சியில் 161, உள்ளிட்ட ஊராட்சிகளில் மொத்தம் 1,256 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாஸ்கரன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர் முருகேசன், ராமன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், பேரூராட்சி தலைவர்கள் பிரதீபா, ரேகா, போதும்பொண்ணு, ஒன்றியக்குழு உறுப்பினர் சிந்தாமணி, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜம்ரூத் பேகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.