மரக்காணம்: கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் முதல் புதுவை மாநில வரையில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள இசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மகாபலிபுரம் முதல் மரக்காணம் வரையில் 6 வழிச்சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கட்டையன் தெரு முதல் கூனிமேடு ஊராட்சி வரையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி எப்போது துவங்கும் என தெரியவில்லை.
இதனால் மண்டவாய் முதல் கூனிமேடு வரையில் சாலையை பராமரிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியின் சாலையோரத்தில் செடி, கொடிகள், மரங்கள் அதிகளவில் வளர்ந்து சாலை ஓரப்பகுதிகளை மறைத்து விட்டன. இதன் காரணமாக இப்பகுதியில் சாலையோரம் வரும் வாகனங்கள் மிக அருகில் வரும் போது தான் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இதில் எதிர்பாராதவிதமாக தவிர்க்க முடியாத உயிரிழப்புகளும் உண்டாகிறது.
எனவே இசிஆர் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையின் ஓரங்களில் வளர்ந்து சாலை பகுதியை மறைத்திருக்கும் மரம், செடி, கொடிகளை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.