மெல்போர்ன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் கனடா அணியை அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. மெல்போர்ன் ரெக்டாங்குலர் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா கோல் மழை பொழிந்தது. அந்த அணியின் ஹேலி ரசோ 9வது மற்றும் 39வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆஸி. அணி இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்திய ஆஸி. அணிக்கு மேரி பவ்லர் 58வது நிமிடத்திலும், ஸ்டெப் கேட்லி 90’+4 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும் கோல் போட்டு அசத்தினர்.
ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா, பி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பி பிரிவில் அயர்லாந்துக்கு எதிராக நேற்று 0-0 என டிரா செய்து 2வது இடம் பிடித்த நைஜீரியா (5) அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கனடா (4), அயர்லாந்து (1) அணிகள் மூட்டை கட்டின. சி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோதிய ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 2 வெற்றி, 1 தோல்வியுடன் 2வது இடம் பிடித்த (6 புள்ளி) ஸ்பெயின் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்த பிரிவில் ஜாம்பியா (3), கோஸ்டா ரிகா (0) அணிகள் பரிதாபமாக வெளியேறின. ஜாம்பியா நேற்று 3-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.