வெலிங்டன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெலிங்டன்னில் நேற்று நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதின. உலக சாம்பியனான அமெரிக்கா எளிதில் வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பித்திலேயே பொய்யாகிப் போனது. ஆட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனைகளின் கால்களே அதிகம் ஓடி உழைத்தன. அதன் பலனாக ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே விக்டோரியா பெலோவா தட்டிதந்த பந்தை ஜில் ரூர்ட் அற்புதமான கோலாக மாற்றினார். அதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து 2வது பாதியில் 62வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திய பதிலி ஆட்டக்கார் ரோஸ் லாவெல்லே பந்தை சரியாக கோல் பகுதிக்கு அடித்தார். அதை அமெரிக்க கேப்டன் லிண்ட்சே ஹோரன் தலையில் முட்டி கோலாக மாற்றினார். அதனால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாமில்டன்னில் நடந்த மற்றொரு இ பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வியட்னாமை வீழ்த்தியது. பிரிஸ்பேனில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நைஜிரியா 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.