சென்னை: ‘‘சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் பொதுவான மகளிர் நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘‘மகளிர் உரிமை மாநாடு’’ திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
அதன் விவரம் வருமாறு: மெகபூபா முப்தி (காஷ்மீர் முன்னாள் முதல்வர்): பெண்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர் கலைஞர். ஆட்சியாளராக மட்டும் அல்லாது எழுத்தாளராகவும் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அதன்படி, அவரின் வழியில் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் என திமுக அரசின் திட்டங்கள் மகத்தானவையாகும். தமிழ்நாட்டில் சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் பொதுவாக மகளிர் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் குறித்த ராஜிவ் காந்தியின் கனவும் நனவாகும்.
சுஷ்மிதா தேவ் (திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்): சமூக நீதி, சமத்துவத்துகாக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர். நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு முன்னிலையில் உள்ளது. தற்போது, மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதற்கு எந்த வித உத்தரவாதமுமில்லை. ஏனெனில், அவை பெயர் அளவிற்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மகளிர் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவருவதில் பாஜ அரசு அக்கறைகாட்டவில்லை.
லெஷி சிங் (பீகார் உணவுத்துறை அமைச்சர்): திமுகவில் மகளிரணி சிறப்பாக செயல்பட்டுவருவதை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டை போலவே பீகாரிலும் மகளிர் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் நிதிஷ்குமார் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கலைஞர் பெண்கள் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்.
டிம்பிள் யாதவ் – (சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்) முற்போக்கு சிந்தனையாளர் கலைஞர் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். மகளிர் உரிமை பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் உரிமை என பல்வேறு திட்டங்களிலும் சமாஜ்வாதி கட்சி அரசுக்கு தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்தது. மேலும், தற்போதைய மோடியின் ஆட்சியில் இன்றைய இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதற்கு மணிப்பூர் மாநிலமே உதாரணமாகும்.
ஹானி ராஜா – (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர்) பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான உரிமைகளை கலைஞரும் திமுகவும் தான் பெற்றுத்தந்துள்ளது. கடந்த 75வருட போராட்டங்களை பறிக்கும் விதமாக இன்றைய மோடி அரசு உள்ளது. இந்தியாவை ஒழிக்கவே நரேந்திர மோடி நினைக்கிறார். மேலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முன்பும் இருந்தாலும் இப்போது எண்ணிகையில் மிக அதிகமாகவும் மிக கொடுரமாகியும் விட்டன.
சுப்ரியா சுலே – (தேசியவாத காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்) பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. தற்போது முதல்வருக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். மராட்டியத்தில் கட்சி மற்றும் சின்னத்திற்காக நாங்கள் போராடி வருகிறோம். ஒருவேளை மராட்டியத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்னால் தமிழகத்தில் திமுகவில் இருந்துபோட்டியிட ஒரு வாய்ப்பை பெற முடியும் என நினைக்கிறேன். அதேபோல், தமிழகத்தின் பெருமை என்பது சமூக நீதி தான். நீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்.பிக்கள் வலிமையான குரல் கொடுத்தனர். அதில் அவர்களை நினைத்து பெருமைபடுகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் – கனிமொழி என்றால் சுவீட் லங்வேஜ் என பொருள்படும். அதேபோல், சென்னையில் கிடைக்கும் மல்லிகைப்பூ மிக அழகாக இருக்கும் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது எனது தாயாருக்கு மல்லிகை பூ வாங்கி செல்வேன்.
சுபாஷினி அலி – (மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்): சமத்துவ முழக்கத்திற்காக முரசொலியை கொண்டு வந்த மிகச்சிறந்த பத்திரிகையாளர் கலைஞர். இதுமட்டுமின்றி, சமத்துவத்திற்கான போராட்டம் என்பது முதன் முதலில் தமிழ்நாட்டில் பெரியார் வழி நடத்தி தொடங்கி வைத்தவர். உத்தரபிரதேசத்தில் ஒரே மாதத்தில் 2 ஆயிரம் கொலைகள், 2 ஆயிரம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறியுள்ளன. இது தான் பாஜக அரசின் சாதனை என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். உ.பியில் தலித் பெண்பாலியல் வன்கொடுமையால் கொலையுண்ட போது போலீசாரே சடலத்தை அவரசமாக புதைத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
ராக்கி பிட்லன் ( ஆம் ஆத்மியின் டெல்லி துணை சபாநாயகர்): பெண் விடுதலைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற தலைவர்கள் அரும்பாடு பட்டுள்ளனர். பல்வேறு தளங்களிலும் பெண்கள் தடைகளை உடைத்து இன்று முன்னேற்றம் கண்டு உள்ளனர். அதன்படி, அரசியலிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க கடுமையான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது என்றார்.