சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை சரிபார்க்கும் இணையதளம் முடங்கியது. கடந்த 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.
இந்த இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைத் தர வேண்டும். பிறகு ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஒடிபி வரும். அதைப் பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். பொதுமக்கள் பலரும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து குழப்பத்தில் இருந்த நிலையில், இந்த இணையதளம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை சரியார்க்கும் இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் www.kmut.tn.gov.in-க்கு சென்றதால் முடங்கியது.