சென்னை: மனசாட்சி உள்ளவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை குறை கூற மாட்டார்கள் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதை பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கொளத்தூர் எவர்வின் பள்ளி மைதான மையப் பகுதியில் ஆயிரம் மாணவிகள் கையில் பூங்கொத்துகளுடன் ஆயிரம் என்ற எண்ணை வடிவமைத்து அமர்ந்திருந்தனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்களை ஆயிரம் கிலோ சாமந்தி மற்றும் ரோஜா மலர்களைக் கொண்டு வடிவமைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எவர்வின் பள்ளி குழும சிஇஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல, ஒன்றியம் மட்டும் அல்ல, உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் துவக்கி வைத்து ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கி சரித்திரத்தில் இடம்பெற்றார். இது நமது முதல்வருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கினாலும் முந்தைய நாளே பலருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக பணம் சென்றடைந்து விட்டது. இதனால் இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். முதல்வரின் கனவு திட்டம் முதல்வரின் தொலைநோக்கு திட்டம் இது. முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்பவர்களுக்கு எந்தவித மனசாட்சி உள்ளது என்பதை உங்களது பார்வைக்கே விட்டு விடுகிறேன்.