புதுடெல்லி: புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை மற்றும் சட்டபேரவைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகும். இது இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்த பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். இதற்காக தேசத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் வாழ்த்துகிறேன். இந்த மசோதாவை சட்டமாக்குவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தேசத்திற்கான அவர்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் வகையில் நாட்டின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அதிக பெண்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த வரலாற்று நாளில் பெண்களுக்கான வாய்ப்புகளின் கதவுகளை திறக்க அனைத்து உறுப்பினர்களும் உதவ வேண்டும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில், நமது அரசு இன்று ஒரு பெரிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை முன்வைக்கிறது.
இந்த மசோதாவின் நோக்கம் மக்களவை மற்றும் சட்டபேரவைகளில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதாகும். எனவே, இரு அவைகளிலும் இந்த மசோதாவை ஒரேமனதாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் இதற்கு முன் பல முயற்சிகள் நடந்தன. தற்போது பெண்களின் உரிமைகளை உறுதிசெய்து, அவர்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கும், இதுபோன்ற பல சிறந்த பணிகளுக்கும், கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தேதி வரலாற்றில் பொறிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
* புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம்
புதிய நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் முதல் அவை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார். முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்றைய சந்தர்ப்பம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் வரலாறு எழுதப்படும் தருணம். எனவே கடந்த கால கசப்புகளை மறந்து, புதிய அத்தியாயத்தை துவக்க வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அனைவரும் உத்வேகமாக இருக்க வேண்டும்.
அவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், உறுப்பினர்களின் நடத்தையை மக்கள் முடிவு செய்வார்கள். நாடாளுமன்ற மரபுகளின் லட்சுமண் ரேகாவை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த சபை எந்தவொரு அரசியல் கட்சியின் நலனுக்காக அல்ல, தேசத்தின் வளர்ச்சிக்காக, நாட்டுக்கு சேவையாற்றும் மிக உயர்ந்த இடம் நாடாளுமன்றம். புதிய பாராளுமன்ற கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்போது, கடந்த கசப்புகளை மறந்துவிட வேண்டும். புதிய கட்டிடத்தின் பிரமாண்டம் அமிர்த காலத்தை நினைவூட்டுகிறது.
கொரோனா தொற்று காலத்தில் கூட கட்டிடத்தில் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களின் கடின உழைப்பை நினைவு கூர்கிறது. இந்த புதிய கட்டிடம் கட்டும் பணியில் 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். மே மாதம் கட்டிடம் திறக்கப்பட்ட நாளில் புனிதமான ‘செங்கோல்’ இங்கு நிறுவப்பட்டது. இது பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான இணைப்பாகவும், சுதந்திரத்தின் முதல் ஒளியின் சாட்சியாகவும் இருந்தது. இந்த புனிதமான ‘செங்கோல்’ இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொட்டது. எனவே, செங்கோல் நமது கடந்த காலத்தின் மிக முக்கியமான பகுதியுடன் நம்மை இணைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.