திருச்சி: தஞ்சை செல்லும் வழியில் கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். திருச்சியில் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்த பின், தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த 14 கட்டிடங்களை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். தஞ்சாவூர் செல்லும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தில் காரை நிறுத்த சொன்னார்.
பின்னர் அப்பகுதியிலுள்ள கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெற்றதை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்ய காத்திருந்த பெண்களிடம் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிரமங்கள் ஏதாவது இருக்கிறதா, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா என்று கேட்டறிந்தார். முகாம் பணியாளர்களிடம் தினமும் எவ்வளவு பதிவு செய்யப்படுகிறது, தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளதா என்று கேட்டதோடு, சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து உதவவும், பதிவேட்டை முறையாக பராமரிக்கவும், விண்ணப்பங்கள் பதிவுக்கான இலக்கை அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.