சென்னை: பெண்களின் கல்விக்கு தடை இருக்க கூடாது, கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத நிலையான சொத்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு, கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2021ம் ஆண்டு தொடங்கி வைத்தேன். இரண்டே ஆண்டுகளில், 685 மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே, இந்த கல்லூரி எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம். முதல் வருடம் 240 பேர். அடுத்த வருடம் மாணவர்களுடைய எண்ணிக்கை 480 ஆனது. இப்போது 685. ஆனால், கல்லூரி சேர்க்கைக்காக கேட்டு வருகிற விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
இதுதான் கல்லூரியின் வெற்றி. இந்த வெற்றியில் பெரும்பங்கு யாருக்கு என்று கேட்டீர்கள் என்றால், அது அமைச்சர் சேகர் பாபுவிற்குதான்.பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் காலை உணவுத் திட்டம். நகர பேருந்துகளில் இலவசப் பயணம். ‘நான் முதல்வன்’ என்கிற ஒரு அற்புதமான திட்டம். கல்லூரிகளில் சேருகின்ற மாணவிகளுக்கு, ‘புதுமைப்பெண்’ என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் ரூ.1000 வழங்கிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்ள வசதியாக இப்போது ‘தோழி விடுதிகள்’ என்று விடுதி ஆரம்பித்திருக்கிறோம். மேலும், செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளிலிருந்து மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்போகிறோம்.
இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கடந்து, எங்கேயாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழ்நிலையில், ஏதாவது ஒரு தருணத்தில் என்னை நீங்கள் சந்திக்கும்போது, உயரமான பதவிகளில் இருக்கிறோம். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம் என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது. இதுதான் பெரியார், அண்ணா, கலைஞர் கண்ட கனவுகள்.
அவர்கள் கண்ட கனவுகளை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதைவிட பெருமை எனக்கு வந்து சேரமுடியாது. நீங்கள் பெருமை அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு அதை விட முக்கியம் எது என்று கேட்டால், நீங்கள் படித்து உங்கள் பெற்றோரை பெருமை அடைய வைக்கவேண்டும். இந்த தாய்த்தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான். கல்வியை யாராலும் பறிக்கவே முடியாது. அதுதான் நிலையான சொத்து. நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் என்ற வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கிறேன். சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் நீங்கள் சாதித்து காட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.