பெங்களூரு: ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். கடந்த 16ம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணை கேப்டமன் ஸ்மிருதி மந்தனா சதம்(117 ரன்கள்) விளாசி அசத்தினார்.
இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது. இங்கிலாந்து அணியை சேர்ந்த ஸ்கிவர்-பிரண்ட் 772 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கை அணியை சேர்ந்த சாமரி அத்தபத்து 768 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 625 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டியில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் மூத்த வீராங்கனையான மரிசானே கப் 425 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 356 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். 4 புள்ளிகள் பெற்று இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் 165 புள்ளிகளுடன் 18வது இடத்தில் உள்ளார்.