Thursday, February 29, 2024
Home » ‘பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு’ டெலிகிராம், இன்ஸ்டாவில் பதிவிட்டு நூதன மோசடி

‘பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு’ டெலிகிராம், இன்ஸ்டாவில் பதிவிட்டு நூதன மோசடி

by Francis

சென்னை: பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு என சமூக வலைத்தளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் இந்த வார்த்தை கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பேசப்படுகிறது. இவை பல்வேறு விதமாக வெவ்வேறு நூதன முறையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகையின் முகத்தை வைத்து தவறான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,லிங்க்குகளை அனுப்பி பொதுமக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது, மோசடிகளில் சிக்க வைத்து பணத்தை பறிப்பது போன்ற சைபர் கிரைம் நிகழ்ந்து வரும் நிலையில், பெண்களை வைத்து பல்வேறு சைபர் கிரைம்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது போன்ற வகையிலும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது பெண்களை பாதிக்கும் வகையில் நூதன முறை சைபர் கிரைம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், லைவ் வீடியோக்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பல்வேறு பக்கங்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறது. அது மட்டுமல்லாது இதற்கென்று தனியாக டெலிகிராம் குரூப்களும் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று சமூக வலைதள பக்கங்களில் உள்ளே நுழைந்தாலே உடனடியாக தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி கும்பல் ஒன்று தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் இருப்பதாகவும் கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் எனக் கூறி பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.200 முதல் ரூ.500 வரை செல்போன் எண்கள் விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வயதிற்கு ஏற்றார்போல் புகைப்படங்களுடன் பெண்களின் எண்கள் விலை வைத்து விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் பேச ஆசைப்படுகிறார்கள் எனக் கூறி வலையை விரித்து பல ஆண்களிடம் செல்போன் எண்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு பெண்களின் செல்போன் நம்பரை ஒருவர் வாங்கும்போது, அவரோடு பேசும் வகையில் பல்வேறு குறுஞ்செய்திகள் அந்த நம்பரில் இருந்து வரும் வகையில் ஆண்களை அந்த மோசடி கும்பல் ஏமாற்றுகிறது. சிலர் அந்த எண்களுக்கு வீடியோ கால், ஆடியோ கால் மூலமாக பேச முற்படும்போது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்களை விற்பதும் அவர்கள் பேசாவிட்டால் வேறு எண்கள் தருகிறோம் இல்லையெனில் அந்த பெண்களை பேச வைப்பதாக தரகர் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசப்படுவதாகவும் அதன் பின்பு சுவிட்ச் ஆப் ஆகி விடுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சமூக வலைதளத்தின் மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்கள் தேடி வரும் வகையில் இந்த மோசடி கும்பல் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வகை மோசடியில் சுய தொழில் மேற்கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக டெய்லர் கடை, ஸ்பா பியூட்டி பார்லர் என பெண்கள் மட்டுமே கடைகள் மற்றும் அலுவலகம் வைத்து நடத்தும் தொழிலில், விளம்பரத்திற்காக கடை போர்டுகளில் உள்ள செல்போன் எண்களையும் இந்த கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

அவ்வாறு தொழில் மேற்கொள்ளும் பெண்களின் செல்போன் எண்களில் நட்பாக பேசி உல்லாசமாக பேசும் பெண்களை ஆசை வலையில் விழ வைத்து, அவர்கள் எண்களையும் விற்பனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சில அப்பாவி பெண்கள் மாட்டிக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இவ்வாறாக பெண்களின் செல்போன் எண்களை விற்பனை செய்யும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை பட்டியலெடுத்து விற்பனை செய்யும் கும்பல்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி தகவல்களை கேட்டுள்ளனர். எனவே ஆண்கள் இதுபோன்று பெண்களின் செல்போன் எண்களை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும், தொழில் மேற்கொள்ளும் பெண்கள் அதற்காக பயன்படுத்தப்படும் செல்போன் எண்களில் இது போன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

5 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi