பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் 1 வீராங்கனை, 4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் நடப்பு சாம்பியன் யூயி சுசாகியை (ஜப்பான்) 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். அடுத்து காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஓக்சனா லிவாச்சுடன் மோதிய வினேஷ் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பரபரப்பான அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோபஸ் சவாலை சந்தித்த வினேஷ் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியதுடன், இந்தியாவுக்கு பதக்கத்தை (தங்கம் அல்லது வெள்ளி) உறுதி செய்து சாதனை படைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தபோது, வீராங்கனைகள் மீதான பாலியல் துண்புறுத்தல்களுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் வினேஷ் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.