ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் குழு போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. ரவுண்ட் ஆப் 16ல் ருமேனியாவுடன் நேற்று மோதிய இந்தியா முதலில் நடந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வென்று 2-0 என முன்னிலை பெற்றது. ஒற்றையர் ஆட்டத்தில் மனிகா பத்ரா, இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா – அர்ச்சனா காமத் வெற்றியை வசப்படுத்தினர்.
எனினும் அடுத்த 2 ஆட்டங்களில் ருமேனிய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி வென்றதால் 2-2 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பரபரப்பான 5வது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கிய மனிகா பத்ரா 11-5, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் அடினா டியாகானுவை வீழ்த்த… இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்கா – ஜெர்மனி இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா காலிறுதியில் மோதும்.