லண்டன்: மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 10வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை நேற்று இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு, ஜூன் 12ம் தேதி இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 12 அணிகள் மோத உள்ளன. இந்த அணிகள் தலா 6 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணியிடம் தலா ஒரு முறை விளையாடும்.
முதல் பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று மூலம் முன்னேறும் 2 அணிகள் இடம் பிடிக்கும். அதேபோல் 2வது பிரிவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று மூலம் மேலும் 2 அணிகள் இணைய உள்ளன. தொடக்கவிழாவை தொடர்ந்து ஜூன் 12ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 14ம் தேதி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடக்கும். அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 30, ஜூலை 2ம் தேதிகளில் கென்னிங்டனிலும், இறுதி ஆட்டம் ஜூலை 5ம் தேதி லண்டன் லார்ட்ஸ் அரங்கிலும் நடைபெறும்.