லண்டன்: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் ரேங்கிங்கில், இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு நிலை உயர்ந்து, 2ம் இடத்தை பிடித்துள்ளார். உலக மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில், தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட், 738 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேசமயம், இந்தியாவை சேர்ந்த அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன், ஒரு நிலை உயர்ந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
இவர், சமீபத்தில், இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீராங்கனை நடாலி சிவர்பிரன்ட், 725 புள்ளிகளுடன் ஒரு நிலை சரிந்து, 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மாத்யூஸ் 4ம் இடத்திலும், ஆஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெரி 5ம் இடத்திலும் தொடர்கின்றனர். மகளிர் கிரிக்கெட்டில், ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சு தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லஸ்டோன் 770 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் தீப்தி சர்மா, 672 புள்ளிகளுடன் மாற்றமின்றி 4ம் இடத்தில் தொடர்கிறார்.