சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியாக, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது எப்போது செயல்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இது தவிர இந்த திட்டத்தின் பயனாளர்களை கணக்கெடுக்க, வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட உள்ளனர்.
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பொது விநியோக கடைகளில் (ரேஷன் கடை) சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான, கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தில், 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் மகளிரின் ஆதார் எண், மொபைல் எண், மற்றும் குடும்ப அட்டை எண், வங்கி கணக்கு எண் மற்றும் சொந்த வீடு உள்ளதா என முக்கிய கேள்விகளுடன் இடம்பெற்றுள்ளது.