லண்டன்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இப்பட்டியலில் கடந்த 6 மாதங்களாக முதலிடத்தில் இருந்து வந்த தென் ஆப்ரிக்காவின் லாரா உல்வார்ட், சமீப கால போட்டிகளில் சொதப்பியதால், 719 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அவர், 2ம் இடத்தை இங்கிலாந்து வீராங்கனை நாட் சில்வர் பிரன்ட் (719 புள்ளி) பகிர்ந்து கொள்கிறார். அதே சமயம், சமீப கால போட்டிகளில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு, 5 ஆண்டுக்கு பின் மீண்டும் வந்துள்ளார். இப்பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை அமி ஜோன்ஸ், 689 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், ஆஸ்திரேலியா வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, 684 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.
டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி, 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 765 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஆஸி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 757 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 753 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், தென் ஆப்ரிக்க வீராங்கனை லாரா உல்வார்ட் 737 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் தொடர்கின்றனர்.
* ஷோபி ஓய்வு
நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான ஷோபி டெவின் (35), இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நேற்று அறிவித்தார். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் ஷோபி தொடர்ந்து விளையாடுவார்.
* விடைபெறும் மேத்யூஸ்
இலங்கை – வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று காலே அரங்கில் தொடங்கியது. இந்நிலையில் இலங்கை அணியில் உள்ள பேட்டிங் ஆல்ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ் (38), தற்போது நடைபெறும் முதல் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.