நன்றி குங்குமம் தோழி
வெள்ளம் வந்ததை மீட்புக் குழுவினருக்கு முதல் தகவலாய் தந்த பெண் இன்று உயிரோடு இல்லை. ‘இந்த கால் என் மனைவிஉடையது. நான் அவளுக்கு அணிவித்த மிஞ்சி இந்த விரலில் இருக்கிறது’ என, கணவர் ஒருவர் ஒற்றைக் காலோடு வந்து நிற்கிறார். சிலபல கிலோமீட்டர் தொலைவில் தன் அம்மா, அப்பா, மனைவி, மூன்று குழந்தைகள், உடன் பிறந்தவர்கள் என 11 பேரின் உடல்களையும் சாலியாறு கொண்டு வந்து சேர்க்காதா என்கிற பரிதவிப்பில், அரபு நாட்டிலிருந்து வயநாட்டுக்கு வந்தவர் அழுது அரற்றுகிறார்… குடும்பம் மொத்தத்தையுமே காணோம். ஆனால் குழந்தை மட்டும் உயிரோடு இருந்தது.
மீட்புக்குழு ஒன்று, இதயம் ஒன்றை தனியாய் பேக்கிங் செய்து எடுத்துக் கொண்டு வந்தது. தப்பி பிழைத்தவர்களோ, ‘வாஷிங் மெஷினில் துணி சுழலுவது போல் நாங்கள் சுழற்றி அடித்து வரப்பட்டோம்’ என தங்கள் துயரத்தை பதிவு செய்தனர். இப்படியாக நூற்றுக்கணக்கான இறப்பின் துயரங்களை நேரில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். இதைவிட கொடூரமான நிகழ்வு கண்டிப்பாக இல்லை என வயநாட்டின் வலிகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கோவை ஜீவசாந்தி அறக்கட்டளையுடன் இணைந்து, ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்து வரும் செனாஷ் சையத்.
‘‘எதிர்படும் அனைவரும் கண்ணீரில் தத்தளிக்க, நாங்கள் வாயடைத்து நின்றோம். சாலியாற்றில் இழுத்து வரப்படுவது பெரும்பாலும் உடல் உறுப்புகள் மட்டுமே. மனித உறுப்புகளை அரித்து எடுக்கும் நிலைதான் அங்கு இருந்தது. சில இடங்களில் மூன்று மாடி வரை தண்ணீர் நின்றது. துர்நாற்றம் வீசும் இடங்களில் எல்லாம் தோண்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காப்பாற்றப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். பல்வேறு துயரங்கள் காட்சிகளாகவும், சாட்சிகளாகவும் இருக்க, இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு, அவர்களின் துயரங்களில் பங்கேற்றுவிட்டு திரும்பி இருக்கிறோம்.
கிட்டதட்ட 17 உடல்களை பேக் செய்து வழியனுப்புகிற முழு பணிகளில் எங்களின் பெண்கள் குழுவும் களத்தில் இருந்தது. பேரிடர் கால அனுபவங்களும், உடல்களை நல்லடக்கம் செய்வதிலும் எங்களுக்கு ஏற்கனவே அனுபவங்கள் இருப்பதால், தகவல் வந்ததுமே, தன்னார்வலர்களாக எங்கள் அறக்கட்டளையை சேர்ந்த எட்டு பெண்கள் குழுவாக வயநாடு பயணித்தோம். வயநாடு மலைப் பயணம் என்பதுடன், கன மழையும் தொடர, பயணம் 5 மணி நேரத்தை தாண்டியது. அங்கு செல்ல மலை மீது செங்குத்தாய் மேலே ஏற வேண்டும். அதேபோல் செங்குத்தாக கீழே இறங்க வேண்டும்.
வயநாடு நடுவில் மலை. மலையிலிருந்து வழிந்தோடி வரும் சூட்சிப்பாரா அருவி. சுற்றிலும் தேயிலைத் தோட்டம். மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் என பார்க்கவே ரம்மியமான காட்சிகள் நிறைந்த சுற்றுலாத் தளம். பழமையான கோயில், பழங்குடி மக்கள் என அழகாக ரம்மியமாகக் காட்சிதரும். சம்பவம் நடந்த குறிப்பிட்ட முண்டக்கை, சூரல்மலை இடங்களுக்குச் செல்ல, ஏழு செக்போஸ்ட்டுகளைக் கடந்து, 5 முதல் 6 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
கண்ணிற்கு எட்டுகிற தூரம்வரை சேரும் சகதியுமாகவே காட்சி தந்தது. அந்தப் பகுதிகளில் நான்கு முதல் 5 அடி ஆழத்திற்கு சேற்றுக்குள் கால்கள் இறங்குவதால் பயிற்சி பெற்ற களப் பணியாளர்களைமட்டுமே உள்ளே அனுமதித்தார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அதிகமாக களப்பணியில் இருந்தார்கள். ஒரு டீம் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு சடலத்தை எடுத்துக்கொண்டு வரும்போது, எப்படி கீழே வருவதென வழி தெரியாமல் தவிக்க, இறுதியில் ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார்கள்.
6 மணிக்கு மேல் களப் பணிகள் நிறுத்தப்பட்டது. முகாம்களில் இருப்பவர்களைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. மெடிக்கலி டிரயின்ட் சைக்கலாஜிஸ்ட் மட்டுமே உறுதுணையாக இருந்து கவனிக்கிறார்கள்’’ என பேசி முடித்த செனாஷைத் தொடர்ந்தார், ஜீவசாந்தி அறக்கட்டளையின் ஆண்கள் குழுவிற்கு தலைமையேற்று சென்ற அஷ்ரஃப்.
‘‘கூடலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரமே வயநாடு. அதனால் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் அறக்கட்டளையின் கூடலூர் நண்பர்கள், குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டார்கள். மறுநாள் காலை கோவையில் இருந்து 6 பேர் கொண்ட குழு கிளம்பியது. இறப்பு எண்ணிக்கை முதலில் 20, 30 என சொல்லி வந்த நிலையில், 200… 300 என தாண்டிய செய்தி எங்களை இருப்புக்கொள்ள விடவில்லை. அடுத்து 10 பேர் கொண்ட குழுவும் கோவையில் இருந்து கிளம்பினோம். எங்களைத் தொடர்ந்து 8 பேர் கொண்ட பெண்கள் குழுவும் வந்தனர்.
நான் பார்த்த மிகப்பெரிய நிலச்சரிவு இது. ஒரு மலையே பெயர்ந்து, அப்படியே சரிந்து, பெரிய பெரிய பாறாங்கற்களோடு உருண்டு, காற்றாறில் இணைந்து, சேரும் சகதியுமாக கீழ் நோக்கி வந்திருக்கிறது. இதில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு நிகழ்ந்த குறிப்பிட்ட இடத்திற்கு இரண்டு குழுக்களாகப் பிரிந்து களத்தில் இறங்கினோம். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வசித்தவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பணியாளர்களின் குடும்பங்கள். 30% பெரிய வீடுகளைக் கொண்ட பணக்காரர்களும் அங்கு வசித்திருக்கிறார்கள். சுற்றுலாப் பகுதி என்பதால், ரிசாட்ஸ்களுடன் ஹோட்டல்களும் இருந்திருக்கின்றன.
எங்கள் அறக்கட்டளை மூலம் எத்தனையோ உடல்களை நல்லடக்கம் செய்திருந்தாலும் இங்கு நாங்க பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானது. உடல்கள் பாறைகளில் அடித்துக்கொண்டு வரப்பட்டு, நைந்து, சேற்றில் சிக்கி, உடல் உறுப்புகள் பெரும்பாலும் தனித்தனியாகக் கழன்றே வந்தன. தண்ணீரிலே உடல்கள் இருந்ததால் அழுகிய நிலையிலும், கை வைக்க முடியாமலும், அடையாளம் காண முடியாத நிலையிலும் இருந்தது. கூடவே ஆடு, மாடு, நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளும் சேற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்டன.
நாங்கள் உடல்களையும், உறுப்புகளையும் சேகரித்து மார்சுவரிக்கு அனுப்பும் வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தோம். சம்பவம் நடந்த அன்றே 1300 முதல் 1500 பேர் உயிரோடு காப்பாற்றப் பட்டார்கள். உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களை இரண்டு மூன்று முகாம்களில் தங்க வைத்து, மீட்டுறுவாக்கப் பணிகளும் அருகிலேயே நடந்து வருகிறது. எங்களின் பெண்கள் குழு அவர்களை முகாமில் சந்தித்தார்கள்.
ராணுவம் களத்திற்கு வந்ததுமே, வாகனங்கள் செல்வதற்கான பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்தார்கள். அதன் பிறகே தேவையான உபகரணங்கள்,
உணவுகள், மீட்ட உடல்களை கொண்டு வருவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே தங்கி பணியாற்றினோம். எங்களுக்கான எல்லா வசதிகளையும் கேரள அரசு செய்து கொடுத்தது. கேரள காவல் துறையும் மிகப்பெரிய அளவில் ஆதரவுக்கரம் கொடுத்தனர்.
பாதிப்படைந்த பகுதி முழுவதுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, வாகன அனுமதி சான்றிதழ் போன்றவை முறைப்படுத்தப்பட்டது. எங்கள் அறக்கட்டளையின் வாகனங்கள், ஃப்ரீசர் பாக்ஸ் போன்றவையும், பேரழிவில் சிக்கிய உடல்களை எடுக்க பெரும் அளவில் உதவியாக இருந்தது. சிதைந்த நிலையில் இருந்த 17 உடல்களை நாங்கள் எடுத்து வந்தோம். அதில் இரண்டு குழந்தைகளின் உடல்களும் இருந்தது.
இது இயற்கை பேரழிவா அல்லது மனிதத் தவறால் நிகழ்ந்த துயரமா என்பதை சொல்லத் தெரியவில்லை. மேற்கொண்டு இந்த மாதிரியான துயரங்கள் நடைபெறாதவாறு அரசாங்கமும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்’’ என்றவாறு விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: கோவை ஜீவசாந்தி அறக்கட்டளை