பெண்கள் ஆஞ்சநேயருக்குப் பொட்டு வைத்துப் பூஜிக்கலாமா?
– காஞ்சனா, குலசேகரபட்டினம்.
ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி என்பதால் அவரைப் பெண்கள் தொடக்கூடாது, அவருக்குப் பெண்கள் பொட்டு வைத்துப் பூஜிக்கக் கூடாது என்று சிலர் கருதலாம். ஆனால், அவர் தெய்வமாக இருப்பதால் அவரை வழிபடுவதில் ஆண்-பெண் என்ற வேற்றுமை உணர்ச்சியை விலக்கிவிட வேண்டும். ஆண்கள் அம்பிகைக்குப் பொட்டிட்டுப் பூஜிக்கவில்லையா?
நெற்றிக்குத் திருமண் அணியும்போது மந்திரம் ஜபித்து அணிய வேண்டுமா? அது என்ன மந்திரம்?
– சுமதி, குண்டூர்.
நெற்றிக்குத் திருமண் அணியும்போது, ‘நமோ நாராயணாய’ என்று சொல்ல வேண்டும். திருநீறு அணியும்போது, ‘சிவாயநமஹ’ என்று சொல்லவேண்டும்.
அம்மன், சுவாமி, முருகன், விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகிய இந்த மூர்த்திகளை எத்தனை முறை வலம் வருவது நல்லது?
– மூர்த்தி, கடலூர்.
தெய்வத்தை வணங்குவதற்கும் வலம் வருவதற்கும் கணக்கு ஒன்றுமில்லை. சிலர் ஒரு முறை நமஸ்கரித்து, ஒருமுறை வலம் வருகிறார்கள். சிலர் மூன்று முறை வணங்கி, மூன்று முறை வலம் வருகிறார்கள். அது அவரவருடைய சம்பிரதாயத்தையும் சௌகரியத்தையும் பொறுத்தது. பக்தியுடன் செய்யும் வணக்கத்தை எப்படி இருந்தாலும் தெய்வம் ஏற்கும்.
அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்வது போன்ற படத்தை, வீட்டில் வைத்து வழிபடக் கூடாதா? அனுமன் படத்தை வீட்டில் வைத்திருந்தால் வீடே தடுமாறிப் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்களே?
– விமலாம்பிகா, பாண்டி.
இந்த கருத்து முற்றிலும் தவறு. ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்வது போன்ற படத்தைத் தாராளமாக வீடுகளில் வைக்கலாம், வழிபடலாம்.
தெய்வப் படங்களையும், பெற்றோர் படங்களையும் தெற்குத்திசை பார்த்தபடி வைத்து வணங்கலாமா?
– கவிதா, கோச்சடை.
மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். அதனால், அப்படி வணங்குவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான் என்று ஆகிறது.
எல்லா ஊர்களிலும் முருகன் இருக்கிறான். ஆனால், பழநி முருகன் மட்டும் சக்தி வாய்ந்தவனாகக் கருதப்படுவது ஏன்?
– முருகன், பாளையங்கோட்டை.
எல்லா ஊர்களிலுமே முருகன் சக்தி வாய்ந்த தெய்வம்தான். சில பழமையான தலங்கள் சிறப்புறுவதற்குக் காரணம் சித்தர்கள் பிர்திஷ்டையே முக்கிய காரணமாகும். எந்த எந்த இடத்தில் தொன்றுதொட்டுச் சித்தர்களும், பக்தர்களும் தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்களோ, அந்த இடத்தில் தெய்வ சாந்நித்தியம் அதிகமாக வெளிப்படும். அப்படிப்பட்ட திருத்தலங்களில் பழநியும் ஒன்று.
பௌர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும்?
– அனீஷ், பாலக்காடு.
சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், சதுர்த்தி விரதம், ஏகாதசி விரதம், பௌர்ணமி விரதம் என்று விரதம் எதுவானாலும், அன்று உபவாசம் இருந்து, அல்லது ஒரு பொழுது மட்டும் உணவு உட்கொண்டு இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேண்டும். ஜபம், தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேளிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது. துதிப்பாடல், பஜனை, பாராயணம், சத்சங்கம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
இல்லறம் உயர்ந்ததா? துறவறம் உயர்ந்ததா?
– பட்டம்மாள், ஆண்டிபட்டி.
இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுமே அறம் ஆகும். இல்லறமாயினும், துறவறமாயினும் அறம் பிறழாமல் இருக்க வேண்டும். எப்போதும் இறைவனின் நினைவுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.