சிட்னி: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவில் தொடர்ந்து 2வது வெற்றியை பெற்றுள்ள இங்கிலாந்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆஸி.யின் சிட்னி நகரில் நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதின. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு லாரன் ஜேம்ஸ் 6வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற உதவினார். இங்கிலாந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும், மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.
இரு அணி கோல் கீப்பர்களும் துடிப்புடன் செயல்பட்டு பல முயற்சிகளை முறியடித்தனர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. அதன் மூலம் டி பிரிவில் இருந்து முதல் அணியாக நாக் அவுட் சுற்றை உறுதி செய்தது. முன்னதாக, அர்ஜென்டினா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.