ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில், இந்திய வீராங்கனைகள் பாருள் சவுதாரி வெள்ளிப் பதக்கமும் பிரீத்தி வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். பரபரப்பான பைனலில் பாருள் சவுதாரி 9 நிமிடம், 27.63 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடமும், பிரீத்தி (9:43.32) 3வது இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை யாவி வின்பிரெட் (9:18.28) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
* 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் (ரிலே ரேஸ்) முகமது அஜ்மல், ராம்ராஜ் வித்யா, ரமேஷ் ராஜேஷ், சுபா ஆகியோரடங்கிய இந்திய அணி புதிய தேசிய சாதனையுடன் (3:14.34) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஹ்ரைன் (3:14.02)
தங்கம், கஜகஸ்தான் (3:24.85) வெண்கலம் வென்றன.
* ஸ்பீடுஸ்கேட்டிங்கில் 2 வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்பீடுஸ்கேட்டிங் ஆண்கள் மற்றும் மகளிர் 3000 மீட்டர் ரிலே ரேசில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆண்கள் ஸ்பீடுஸ்கேட்டிங்கில் ஆனந்த் குமார், விக்ரம் ராஜேந்திரா, சித்தாந்த் ராகுல் ஆகியோரடங்கிய இந்திய அணி 3வது இடம் பிடித்தது. மகளிர் ஸ்பீடுஸ்கேட்டிங்கில் கார்த்திகா, ஆரதி கஸ்தூரி, ஹீரல் சாது ஆகியோரடங்கிய இந்திய அணியும் வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டு அசத்தியது.
* மகளிர் கபடியில் இந்தியா தைபே டிரா
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் கபடியில் இந்தியா – சீன தைபே அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இரு அணி வீராங்கனைகளும் கடுமையாகப் போராடியதால் கடைசி வரை இழுபறி நீடித்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 34-34 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலை வகித்ததால், போட்டி டிராவில் முடிந்தது. ஆண்கள் கபடி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று வங்கதேச அணியுடன் மோதுகிறது.
* நீளம் தாண்டுதலில் வெள்ளி
மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சோஜன் எடப்பிள்ளி அன்சி 6.63 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் சீனாவின் ஜியாங் ஷிகி (6.73 மீ.) தங்கம், ஹாங்காங் (சீனா) வீராங்கனை யு ங்கா யான் (6.50 மீ.) வெண்கலம் வென்றனர். இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஷைலி சிங் (6.48 மீ.) துரதிர்ஷ்டவசமாக 5வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார்.