இண்டியன் வெல்ஸ்: இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் போலந்து நாட்டை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய இகா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் 9ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரிவா, ரஷ்ய வம்சாவளி கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ஆண்ட்ரெவ்னா ரைபாகினா உடன் மோதினார். 7ம் நிலை வீராங்கனையாக இருந்தபோதும் மிர்ராவின் ஆட்டத்துக்கு ரைபாகினாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அதனால், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மிர்ரா வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற போட்டிகளில் உக்ரைன் வீராங்கனை எலினா மிகைலிவ்னா ஸ்விடோலினா, அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலாவையும், சீன வீராங்கனை ஸெங் கின்வென், உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக்கையும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.