சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கியது. தற்போது ஐந்தே மாத காலத்தில் இந்த வழக்கை விசாரித்து தற்போது சம்பந்தப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி தான் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, வரும் இரண்டாம் தேதி தண்டனையை வழங்குகிறது.
இவ்வளவு விரைவாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையை பாராட்டுகிறேன். ஆனால், இப்போதும் கூட எதிர்க்கட்சிகளுக்கு அரசு நடவடிக்கையை பாராட்ட மனமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி யாரை காப்பாற்றுவதற்காக இந்த விரைவான நடவடிக்கை என்று கேட்பது விசித்திரமாக உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்கள் வழக்குகள் அதில் எவ்வளவு காலங்களில் அது முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் எடை போட்டு பார்க்கக் கூடியவர்கள்.
எனவே பெண்களை பாதுகாப்பதில், குற்றங்களை தடுப்பதில், குற்றவாளிகளை தண்டிப்பதில் தமிழ்நாடு அரசின் முதல்வரின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.