இப்பொழுது பல பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை மறந்து கொண்டிருக்கிறார்கள் இதில் வகிட்டில் எங்கே வைப்பது? அதுவும் ஸ்டிக்கர் பொட்டு வைப்பவர்கள் வகிட்டைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை. ஆனால் நெற்றி வகிட்டில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும். அது அவர்கள் சுமங்கலித்துவத்தை அதிகப்படுத்தும். அதாவது கணவனின் ஆயுள் தோஷத்தை நீக்கும். வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதால், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமையும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும். அதனால்தான், நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்தச் சூடு உடனடியாகத் தணிகிறது மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்கின்றாள். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று பெண்கள் வகிடு. அது மகாலட்சுமி வாசம் செய்யும் புள்ளி அங்கே குங்குமம் வைப்பதினால் சகல ஐஸ்வர்யங்களும் நல்வாழ்வும் கிடைக்கும். அது மட்டுமல்ல காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் அணியும் தாலியும், வகிட்டில் வைக்கும் குங்குமமும் பெண்ணின் மங்கள கரத்தை அதிகரிப்பதோடு, அவள் திருமணமானவள் என்பதையும் சொல்லும்.
?நிர்மால்யம் என்பது என்ன?
பூஜை அறையில் சுவாமி படத்துக்குப் பூக்களைப் போடுகிறோம். அடுத்தநாள் அந்த பூக்களை எடுத்து விடுகின்றோம். ஏற்கனவே போட்டு எடுத்த பூக்களை நிர்மால்யம் என்பார்கள். கோயிலிலும் சுவாமிக்கு போட்டிருந்த மாலைகளைக் களைந்தால் அந்த மாலைகளை நிர்மால்யம் என்பார்கள். இந்த நிர்மால்யங்களை நாம் ஒரு கூடையில் சேகரித்து, குப்பையில் சேர்க்காமல், ஓடுகின்ற நீரில் சேர்க்க வேண்டும்; அல்லது கால் படாத இடத்தில் சேர்க்க வேண்டும். நிர்மால்யத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். கண்ட இடத்தில் வைப்பதோ, அசுத்தமான இடத்தில் வைப்பதோ கூடாது. அது தெய்வ குற்றம் போன்றதுதான்.
?மாவிலைத் தோரணம் கட்டுவதால் என்ன பலன்?
பலன் இல்லாமலா நம்முடைய ஆன்றோர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள். ஒரு சுபகாரியம் என்றால் வாழை மரத்தையும் மாவிலைத் தோரணத்தையும் தான் கட்டுவார்கள். அந்த மாவிலைத் தோரணத்தின் மகத்துவம் நமக்கு இப்பொழுது தெரியவில்லை. மாவிலை எதிர்மறை சக்தியை விரட்டும் ஆற்றல் பெற்றது. மந்திர சக்திகளை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. வீட்டில் மாவிலை கட்டுவதன் மூலம் தூய்மை அதிகரிக்கிறது. நல்ல சக்தியும் ஆற்றலும் ஈர்க்கப்படுகிறது. தூண்டப்படுகிறது. இப்பொழுது அசல் மாவிலைக்கு பதிலாக பிளாஸ்டிக் மா இலைகளை கட்டுகிறார்கள். அது அலங்காரமாக இருக்கலாம். ஆனால் பயன் இல்லை. அது பூஜைக்குரிய தகுதி படைத்ததல்ல.
?காவிநிற வேட்டியை இல்லறத்தார்கள் அணியலாமா?
கூடாது. அழுக்கு படிந்து விடும் என்று இப்பொழுது பலர் வண்ண வேட்டிகளை, குறிப்பாக காவி வண்ண வேட்டிகளை அணிகின்றார்கள். குறிப்பிட்ட தெய்வத்துக்கு விரதம் இருக்கும் நாட்களில் வேண்டு மானால் அணியலாம். அம்மனுக்கு சிவப்பாடை, பெருமாளுக்கு மஞ்சளாடை, ஐயப்பனுக்கு கறுப்பு ஆடை என்று அந்த குறிப்பிட்ட விரத நேரங்களில் அணிந்து கொள்ளலாம். ஆனால் எல்லா நேரத்திலும் அணியக்கூடாது.
?எவர்சில்வர் பாத்திரங்களில் நிவேதனங்களை வைத்து படைக்கலாமா?
கூடாது. எவர்சில்வர் என்பது இரும்பு சம்பந்தப்பட்டது. ஸ்டைன் லெஸ் ஸ்டீல் என்பார்கள். அதில் நிவேதனம் வைப்பது முறை அல்ல. செம்பு, பித்தளை, வெள்ளி, முதலிய பாத்திரங்களில் நிவேதனம் வைக்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது வாழை இலை. எல்லா இடத்திலும் கிடைப்பது. எளிமையானது. அதில் வைத்து நிவேதனம் செய்யலாமே!
?வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று சொல்கிறார்களே? வாழ்த்துவதற்கு வயது முக்கியமா?
வாழ்த்துவதற்கு வயது முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் மனதுதான் அதிலும் வைணவ மரபு மனதார வாழ்த்துங்கள் என்று கூறுகிறது. அதனால் தான் பெரியவர்களுக்கு கூட இளையவர்கள் பல்லாண்டு பாடும் வழக்கம் உண்டு. மணிவாசகர் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று வாழ்த்துகிறார். மணி வாசகரை விட பெரியவன் அல்லவா இறைவன். பெரியாழ்வார் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுகிறார். எனவே மனம் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்து பெறுங்கள்.
?குணரத்ன கோசம் என்ற நூல் யாரால் இயற்றப்பட்டது?
கூரத்தாழ்வான் (கூரத்தாழ்வார் என்று எழுதக்கூடாது) திருக்குமாரனான பராசர பட்டரால் இயற்றப்பட்ட நூல். அதில் திருவரங்கம் பெரிய பிராட்டியார் மீது அற்புதமான ஸ்லோகங்களைப் பாடியிருக்கிறார். அதாவது மகாலட்சுமி தாயாரின் பெருமைகளை விளக்கும் அருமையான நூல் அது. பராசரப்பட்டரை தாயாரின் வளர்ப்புப்பிள்ளை என்பார்கள். தாயாரின் மஞ்சள் குடிநீரும், அந்த சந்நதிக்கு முன் தாயார் கண் பார்வையில் போடப்பட்ட தொட்டிலும் பராசரப்பட்டரை ஞானியாக்கின என்பார்கள்.
?வெற்றிலை போடுகிறவர்கள், ஏன் காம்பைக் கிள்ளி விட்டு போடுகிறார்கள்?
வெற்றிலை என்பது மங்களகரமானது. தாம்பூலம் என்று சொல் வார்கள். வெற்றிலையின் நுனியில் மகாலட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூத்த தேவியும் (அதாவது மூதேவி) இருப்பதாக ஐதீகம் எனவே மூத்த தேவியான காம்பைக் கிள்ளிப்போட்டுவிட்டு, வெற்றிலையைப் போடுகிறார்கள்.
?பூஜையில் படைக்கும்போது ஒரு வெற்றிலை ஒரு பாக்கு வைக்கலாமா?
கூடாது. ஆனால் சிலர் அப்படி வைப்பதையும் பார்த்து இருக்கிறேன். அவசரத்திற்கு வெற்றிலை பாக்கு இல்லாத பொழுது ஒரு வெற்றிலை ஒரு பாக்கு என்று வைக்கிறார்கள். ஆனால் அது சரி அல்ல. எதை வைத்தாலும் இரண்டு என்கிற இரட்டைப்படையில் தான் வைக்க வேண்டும். இரண்டு பழங்கள், இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு என்று வைத்து பூஜை செய்வதுதான் முறை.
?விளக்கேற்றிய பின்னும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் யாருக்கும் காசு பணம் தரக்கூடாது என்கிறார்களே?
ஆமாம். மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடுவாள் என்கின்ற ஒரு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் விளக்கு வைத்து விட்டால் வெளியே யாரும் செல்ல மாட்டார்கள். எல்லாக் காரியங்களும் பகலிலேயே முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள். அதற்குப் பிறகு அடுத்த நாள் காலையில் தான் அவர்களுடைய பணிகள் துவங்கும். அதோடு மாலையில் மகாலட்சுமிக்கு விளக்கு வைத்த பிறகு அந்த மகாலட்சியின் அம்சமான செல்வத்தை அதாவது காசு பணத்தை வெளியே அனுப்பக்கூடாது என்று ஒரு ஐதீகம்.
தருவதாக இருந்தால் விளக்கு வைப்பதற்கு முன்னாலேயே தந்து விடலாம் ஆனால் விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்குகளும் உண்டு. ஆபத்துக்கு தோஷமில்லை; பாவம் இல்லை என்ற பழமொழி உண்டு. ஒருவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவசர வைத்திய உதவிக்கு பணம் காசு என்று வந்து நிற்கிறான் என்று சொன்னால், இன்று வெள்ளிக்கிழமை, இருட்டிவிட்டது, நாளைக்கு வா என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது பாவம். அப்பொழுது அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம். தோஷம் இல்லை. புண்ணியம்தான்.
?பிரதோஷ வழிபாட்டின் போது கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டால்…?
செல்ல முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்? தங்கள் இல்லத்திலே ஓர் சந்தன லிங்கத்தை உருவாக்கி தூபம், தீபம், வெற்றிலை, வாழைப்பழம், வைத்து அர்ச்சனை செய்து கற்பூரம் தீபாராதனை செய்து வழிபாடு செய்தால் மிகுந்த பலனைத் தரும். பிரதோஷ விரதத்தால் 1. தடைபெற்ற திருமணம் நடைபெறும். 2. குழந்தை பாக்கியம் கிட்டும். 3. கடன் பிரச்னை தீரும்.
?பீஷ்மர், துரோணர், தருமனுக்குச் சொல்லாமல் அர்ஜுனனுக்கு ஏன் கீதையைச் சொன்னான்?
ஒரு சுவையான கற்பனை உரையாடல் இது குறித்து உண்டு. இதே கேள்வியை அர்ஜுனன் கேட்டானாம்.குருஷேத்திரப் போர் முடிந்து ஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர். அப்போது அர்ஜுனன் மனதில் நம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது. பலராமரிடம் சொல்லி இருக்கலாம். தாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம். ராதை, பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.? ஏன் என்னிடம் சொன்னார்.? காரணம் என்ன? என்று யோசித்த அர்ஜுனன் தன் சந்தேகத்தை கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான். கண்ணா… கீதா உபதேசத்திற்கு ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம்.
அண்ணன் தருமனை விட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் யார் இருக்க முடியும்? இப்படி பலர் இருக்க உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்து விடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கருதியிருக்கிறீர்களே? இது எவ்வகையில் நியாயம்? கண்ணன் நிதானமாகச் சொல்கிறார்.
‘‘அர்ஜுனா…நீ என் தோழன், என் தங்கையை மணந்தவன் என்பதால் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ தாத்தா பீஷ்மரைச் சொன்னாய். அவர் சாஸ்திரம் தெரிந்தவர். ஆனால் அதன்படி நடக்கும் மன உறுதி இல்லாதவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஆசிர்வதிக்கிறார். இது இரட்டை வேடம்.
அடுத்து உன் அண்ணன் தர்மன். அவர் நல்லவர்தான். நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் ஆனால் முன் யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் சூதாடியவர். சந்தோசம் என்று கட்டிய மனைவியையே பணயம் வைத்தவர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குறை உண்டு.
ஆனால் அர்ஜுனா! நீ மகாவீரன். இரக்கம் மிகுந்தவன். முன் யோசனை உள்ளவன். செயலுக்கு முன் விளைவுகளைப் பற்றி யோசிப்பவனாக. இருக்கிறாய். உன்னைவிட வயதான, பலரையும் மதிக்கிறாய். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்று யோசித்தாய். அத்தனைப் பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். இதைவிட பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று கூறினாய்.
நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழிவாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது? அநீதி எது? என்று சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க, அனைத்தையும் தியாகம் செய்யும் மன வலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. அந்தத் தகுதி உன் ஒருவனுக்கே இருந்ததால் கீதையை உபதேசித்தேன். அதைவிட முக்கியம் அது உனக்குத் தேவையாக இருந்தது. நோய் உள்ளவனுக்குத் தானே மருந்து தேவை.
?தர்ப்பணத்தில் இறைக்கும் எள்ளும் நீரும் எப்படி நம் முன்னோர்களுக்கு போய்ச் சேரும்?
நாம் இங்கே ரூபாய் கொடுத்தால் அமெரிக்காவில் கொடுத்த ரூபாய்க்கு இணையாக டாலரில் பெற்றுக் கொள்கின்றோம். அதேபோலத்தான், இங்கே கொடுக்கப்படுகின்ற எள்ளும் நீரும் அங்கே (பிதுர் லோகத்தில்) அவர்களுக்கு, உரிய உணவாக மாற்றம் பெற்றுக் கிடைக்கிறது. இதைவிட இன்னொரு உதாரணம் சொல்கிறேன். பசுமாட்டுக்கு நாம் தவிடு, வைக்கோல், புண்ணாக்கு, தழைகளைத் தருகின்றோம். சாப்பிட்ட பசுமாடு அதையே நமக்குத் திருப்பித் தருவது கிடையாது. சுவையான பாலாகத் தருகிறது. புண்ணாக்கு பாலாகும் என்றால் எள்ளும் நீரும் ஏன் பிதுர்களுக்கு உரிய உணவாக மாறாது?
தேஜஸ்வி