சென்னை: ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதம் ரூ.1000 என பெண்களுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.12,000 இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளது. இந்த விழாவுக்கு வருகை தந்திருந்த பெண்களுக்கு அரசு சார்பில் கையேடுகள் வழங்கப்பட்டது.
அதில் மகளிர் உரிமைத் தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி. எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். ஏடிஎம் பின் முதலியனவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மாதம் தோறும் 15ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்று சேர்ந்தது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியான 1.06 கோடி பெண்கள் வங்கி கணக்கில் தலா ரூ.1000 செலுத்தப்பட்டுவிட்டது.