பெரம்பூர்: கலைஞரின் செம்மொழி பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மகளிர் கைகளில் சுழல் நிதி, மாறும் வரலாற்று புதுவிதி’’ என்ற தலைப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று மாலை கொளத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை பொதுக்குழு உறுப்பினரும் 6வது மண்டல குழு தலைவருமான சரிதா மகேஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்வழி செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு எம்பி, மேயர் பிரியா, மாநில மகளிரணி தலைவி விஜயா தாயன்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் கலந்துகொண்டனர். இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு கலந்து கொண்டனர்.இதில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது;
கலைஞரை பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு நாள் பத்தாது. ஏனென்றால் அவர் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. தற்போது கூட கலைஞர் நினைவிடம் சென்று சுற்றி பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி வந்தவர்தான் கலைஞர். தற்போது அதே வழியில் நமது முதலமைச்சரும் பெண்களுக்கு அதிகமாக திட்டங்களை செய்து வருகிறார். ஏழை, எளிய, நடுத்தர பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் சொந்த காலில் நிற்கவேண்டும். சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார். சுழல் நிதி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறகளிலும் வேறு மாதிரி இருக்கும். தற்போது 37 ஆயிரம் கோடி ரூபாய் பெண்களுக்கு கடனுதவி அளிக்க திட்டம் வைத்துள்ளோம்.
இன்று பெண்களுக்கு 100 பிங்க் ஆட்டோ முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் பல பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். சின்ன கிராமத்தில் இருந்துவந்து நான் அமைச்சரான பிறகு பல பேருக்கு என்னால் உதவ முடிகிறது என்றால், நான் இந்த அளவிற்கு அமைச்சராக இருப்பதற்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.
திவ்யா சத்யராஜ் பேசும்போது, ‘’எனக்கு திமுக திவ்யா சத்யராஜ் என்கின்ற புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது. இந்த அடையாளம் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கர்வம் கொள்கிறேன். பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது பெண்கள் சாதிக்கக்கூடாது, அப்படி நினைத்த, மத யானைகளை வீழ்த்திய மாபெரும் தலைவர் கலைஞர். பெண் கல்விக்கு உயிர் கொடுத்தவர் கலைஞர்’ என்றார். திமுகவை அழிக்க சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை அழிப்பது பெண்களின் சுயமரியாதையை அழிப்பதற்கு சமம், எங்கள் அனைவரையும் கொன்று புதைத்தாலும் திமுகவை அழிக்க முடியாது. இவ்வாறு பேசினார்.