எந்த சூழலிலும் முயற்சியைக் கைவிடாதவர்கள் நிச்சயம் ஒருநாள் இலக்கை அடைகிறார்கள். என்னால் முடியுமா என்கிற ஐயம் தடைக்கல்லாக மாறுகிறது.முடியும் என்ற தன்னம்பிக்கையே படிக்கல்லாகிறது. ஒரு குருவிடம் அறிவிலும், ஞானத்திலும் சிறந்த இரண்டு சீடர்கள் இருந்தார்கள். குருவை மிஞ்சிய சீடர்கள் என்பார்களே! அப்படிப்பட்டவர்கள். இருவரில் யார் சிறந்தவர் என்பதை அறிய ஒரு போட்டி வைத்தார் குரு.இரண்டு புத்தர் சிலைகளை அவர்களிடம் காட்டிய குரு,ஒன்று பளிங்குக் கற்களால் செய்யப்பட்டது. இன்னொன்று வெண்ணெயால் உருவாக்கப்பட்டது. எது வெண்ணெய்ச் சிலை என்பதைக் கண்டுபிடிங்கள்? என்றார்.இரண்டு சீடர்களும் சிலை களைச் சுற்றிச் சுற்றி வந்தனர். எந்த வேறுபாட்டையும் கண்டறிய முடியவில்லை, இரண்டும் ஒன்றுபோலவே தோன்றியது.கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்ததால் தொட்டுப் பார்க்க முடியவில்லை. வாசமும் வெளியே வரவில்லை.
ஒரு சீடன் விரைந்து முடிவெடுத்தான். நேராக குருவிடம் வந்தான். குருவே, விடை காண முடியாத ஒன்றிற்காக காலவிரயம் செய்வது வீண் வேலை. அந்த முட்டாள்தனத்தைத் தொடர விரும்பவில்லை என்றான். குரு மகிழ்ச்சி என்றார்.இன்னொரு சீடன் எப்படியும் தன்னால் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினான்.நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின.ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் முயற்சியைத் தொடர்ந்தான். குளிர்காலம் போய் கோடைக்காலம் வந்தது. அறையில் வெப்பம் பரவியது. வெண்ணெய் உருகத் தொடங்கியது. உண்மை வெளிப்பட்டது. தன் முயற்சியைக் கைவிடாதவன் வெற்றி பெற்றான்.ஓட்டப்பந்தயப் போட்டியில் பாதி தூரம் வந்துவிட்டு சோர்ந்து போனவர்களுக்கு எப்போதுமே பரிசு கிடைப்பதில்லை. ஓட்டத்தை முழுமையாக,முதல்வனாக முடிப்பவரே வெற்றியாளர்.எதையும் தொடங்கிவிட்டு பாதையில் நிறுத்தாதீர்கள். முயற்சியை முழுமையாகக் கடைப்பிடியுங்கள். அதன் பலனை முழுமையாக அனுபவியுங்கள்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியைச் சொல்லலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் பழங்குடி இனக் குடும்பத்தில் பிறந்தவர் சவிதா. அவர் குடும்பத்தின் மூன்றாவது குழந்தை.வறுமையான குடும்பத்தில் பிறந்த சவிதா 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். தனது கிராமத்தில் 10 ஆம் வகுப்பு முடித்த முதல் பெண் இவர் தான். பள்ளியில் படிக்கும் போது கிடைத்த கல்வி உதவித்தொகை மூலமாக கல்வியை மேலும் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர் தன்னுடைய கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்க அனுமதி பெற்றார்.பேருந்து கட்டணம் இரண்டு ரூபாய் கூட இல்லாததால் அவர் பள்ளிக்கு நடந்தே செல்வார். சவிதா தனது படிப்பை முடிக்கும் போது, ஒரு பணக்காரக் குடும்பம் அவர்களுடைய மகனுக்கு சவிதாவை திருமணம் செய்து கொள்ள முன்வந்தது.திருமணமான பிறகு சவிதாவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவருடைய கணவன் வீட்டார் சவிதாவை ஒரு வேலைக்காரி போல நடத்த ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல், பல கட்டுப்பாடுகளுடன் அந்த வீட்டில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. எல்லோருடனும் சாப்பாட்டு மேசையில் சாப்பிடக்கூடாது.மற்றவர்கள் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும்.தினமும் மிகவும் குறைவான உணவுதான் அவருக்கு தரப்பட்டது. தினமும் வயிற்றுப் பசியின் காரணமாக ரொட்டிகளை குளியலறையில் எடுத்துச் சென்று சாப்பிட்டு தனது பசியை போக்கிக் கொண்டார். இரண்டு குழந்தைகள் இருந்தபோதிலும் சவிதாவை அவரது மாமியார் தினமும் தாக்கி துன்புறுத்தினார்.
கணவன் மற்றும் மாமியாரின் கொடுமை தினமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்த சவிதா ஒரு நாள் தவறான முடிவிற்குச் சென்றார். தன்னுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். அப்படி ஒரு தவறான முடிவுக்கு சென்ற போதும் அவரைக் காப்பாற்ற அந்த வீட்டில் யாரும் முன்வரவில்லை, அப்போதுதான் தான் எடுத்த முடிவு தவறு என உணர்ந்தார் சவிதா. இவர்களுக்காக நான் ஏன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். வாழ வேண்டும்.வாழ்ந்தால் மட்டும் போதாது இவர்களுக்கு முன்னால் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் ஏற்பட்டது.பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். அழகு நிலையம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.பணம் சம்பாதித்தார். பின்னர் அவர் தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்தூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் வரைப்பெற்றார். தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அவரது குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யவும் தீர்மானித்த சவிதா, பல வேலைகளில் ஈடுபட்டார். பகலில் தையல் தொழிலாளியாகவும், இரவில் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியும் செய்தார்.
இந்த நிலையில் சவிதாவின் கல்வி வெற்றிக்கான பாதையானது, இருந்த போதும் அவரது வாழ்க்கை கடுமையான சவால்களால் சூழந்திருந்தது. பிரிந்த அவருடை கணவர் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டேயிருந்தார். ஆனால், சவிதா இதையெல்லாம் ஒரு பொருட்டாகக்கூட எண்ணவில்லை. அவருடைய இலக்கில் பல மடங்கு ஊக்கத்துடன் செயல்பட்டார். அத்தனை தடைகளையும் தவிடு பொடியாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.இறுதியில் அவரது எம். ஏ படிப்பை சிறந்த மதிப்பெண்களுடன் முடித்தார். பொது நிர்வாகப் பாடத்தில் கல்லூரியில் முதலிடம் பெற்றார். இது அவரது எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிட்டது பட்டம் பெற்றபிறகு, செய்தித் தாள் ஒன்றில் சிவில் சர்விஸ் தேர்வு பற்றிய செய்தியை தெரிந்துகொண்டார். அப்போது அவருக்கு மனதில் இருந்ததெல்லாம் ஒன்று தான். உயர் அரசு அதிகாரியாக வேண்டும். குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்பது மட்டுமே. அன்று முதல், குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வே சரியானது என்று அதை அடைவதை இலக்காக்கினார். பல வருடப் போராட்டம் மற்றும் விடாமுயற்சிக்குப் பிறகு, சவிதாவின் முயற்சிக்கு பயன் கிடைத்தது. ஆம், அவர் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று உயர் அரசாங்கப் பணியை பெற்றார்.
கல்வி என்பது அதிகாரமளித்தல் மற்றும் சமூக சமத்துவத்திற்கான ஒரு முக்கியமான கருவி என்பதை தீர்க்கமாக நம்புகிறார் சவிதா. அவரது சொந்த வாழ்க்கையில் கல்வியின் சக்தியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நன்கு உணர்ந்துள்ள அவர் அதிகாரத்திற்கு வந்தபிறகு, கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும், குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிடைக்கச் செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஒரு அரசாங்க அதிகாரியாக, சவிதா பெண்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.சவிதாவின் கதை தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது. இது கல்வியின் முக்கியத்துவத்தையும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதிக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், மன உறுதியுடனும், தைரியத்துடனும் செயல்பட்டால் எந்தத் தடையையும் தவிடு பொடியாக்கலாம் என்பதை சவிதா நிரூபித்துள்ளார். வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் அந்த கடினமான பாதையில்தான் வெற்றிக்கான வழி இருக்கிறது என்றார் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ். இந்த வரிகளுக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் சவிதாவின் வாழ்க்கை என்பதில் ஐயமில்லை.