Tuesday, April 16, 2024
Home » பெண் தொழில்முனைவோரை அதிகம் உருவாக்க வேண்டும்!

பெண் தொழில்முனைவோரை அதிகம் உருவாக்க வேண்டும்!

by Porselvi

“ஆரோக்கியமே ஆயுள் மந்திரம்” என்று நமது பாரம்பரியமான மூலிகை வகைப்பொருட்களை வைத்து பலவிதமான உணவு மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார் சென்னை குரோம் பேட்டையை சேர்ந்த ஹூதா. பாரம்பரிய மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்த இவர் இன்று திறமைமிக்க பெண் தொழில்முனைவோராக மிளிர்ந்து வருகிறார் சம்சுல் ஹுதா பானு. இவரது தயாரிப்பில் பிரசவ லேகியம், டயா கேர் பவுடர் (சுகர் வியாதிக்கானது) மற்றும் மூலிகைப் பொடிகள் போன்றவை தனித்துவமிக்கது. மேலும் நமது சமையலை சுலபமாக்கும் பல பொடிவகைகளையும், தொக்கு வகைகளையும் பல மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி சிறந்த சுவையுடன் ஆரோக்கியத்தினை கவனத்தில் கொண்டு தயாரித்து தருகிறார். தினகரன் மகளிர் மலருக்காக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

இந்த ஃபாஸ்ட்ஃபுட் காலத்தில் ஆரோக்கிய உணவுகள் குறித்தான எண்ணம் எப்படி எழுந்தது?

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய காலத்தில் தான் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வுகளும் தேவைகளும் எனக்கும் ஏன் மக்களுக்குமே அதிகம் வந்தது எனலாம். கொரோனா காலத்திற்கு முன் பல்வேறு சமையல் பொடி வகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தேன். 2020 ம் ஆண்டில் கபசுர குடிநீர் தேவை அதிகமாக இருந்தது. அதனை தயாரித்து பல நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தேன். அதனை பயன்படுத்தி பலன் கண்ட பலரும் பல்வேறு வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தினார்கள். அந்த அறிமுகத்தில் பலரும் பலவித ஹெல்த் ப்ராடக்ட்களை கேட்க, ஆரோக்யத்திற்கான பல பொருட்களை அறிமுகப்படுத்தினால் என்ன என்கிற ஐடியா தோன்றியது, அப்போது ஆரம்பித்தது தான் இந்த ஆரோக்கியமான தனித்துவமான ஹூதா ஹெல்த் கேர் ப்ராடக்ட் பொருட்கள்.

உங்கள் தயாரிப்புகளின் தனிச்சிறப்புகள் என்ன?

எங்கள் தயாரிப்புகளின் நோக்கமே ஆரோக்கியம் தானே. அதனால் நமது பாரம்பர்ய மூலிகைகள் மற்றும் ஆரோக்கியமான இயற்கைப் பொருட்களை கொண்டு சுத்தமான பொருட்களை தயாரித்து தருகிறேன். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கான ஹெல்த் மிக்ஸ், பிரசவமான பெண்களுக்கான மருந்து குழம்பு மசாலா, பிரசவ லேகியம், குழந்தைகளுக்கான சத்துமாவு, பிரண்டை மற்றும் முடக்கத்தான், கொத்தமல்லி, மக்கானா ( தாமரை இதழ் விதை ) போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி எனது தயாரிப்புகளை சிறந்த முறையில் செய்து தருகிறேன். அழகு சாதன பவுடர்கள், ஹேர் ஆயில் மற்றும் வாசனை சீயக்காய்த் தூள் போன்றவற்றை 32 இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி தயாரித்து அளிக்கிறேன்.

என்ன வகையான மூலிகை மற்றும் மருந்துப் பொருட்களை உங்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறீர்கள்?

பிரண்டை, முடக்கற்றான் கீரைகள், முருங்கை கீரைகள், மக்கானா என்கிற தாமரை இதழ் விதைகள், ஆரோக்கியமான முளைகட்டிய தானிய வகைகள், பீட்ரூட் பொடிகள், மேலும் ஏராளமான கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய பொருட்கள், மருந்துக் குழம்பு மசாலா மற்றும் பிரசவ லேகியங்களில் பல்வேறு விதமான நாட்டு மருந்துப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தியே பல பொடிகளை தயாரித்து வருகிறேன். மக்கானா என்கிற தாமரை விதையையும் பயன்படுத்திவருகிறேன்.

மக்கானாவை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்?

மக்கானா என்கிற தாமரை விதை, கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக கொண்டுள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மக்கானா இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிப்பதை தடுக்கும். இது கலோரிகளில் குறைவாகவும், போதுமான அளவு கால்சியம் மற்றும் புரதத்தையும் கொண்டது. இது பசியைக் குறைத்து, உடல் எடை குறையவும் உதவுகிறது. சரியான எடையை நிர்வகித்தல் என்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவும். எனவே எனது டயாகேர் ப்ராடக்ட் களில் மக்கானாவை பயன்படுத்துகிறேன்.

என்னென்ன வகையான பொருட்களை தயாரிக்கிறீர்கள்?

அசைவத்தில் வஞ்சிரம் மீன் கருவாட்டுத் தொக்கு , இறால்மீன் தொக்கு, பிரியாணி மசாலா போன்றவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. சைவத்தில் மல்லித் தொக்கு, பூண்டுத் தொக்கு, தக்காளி தொக்கு, கோங்குரா தொக்கு, வத்தல் குழம்பு மிக்ஸ், புளியோதரை தொக்கு, புளிக்குழம்பு மசாலா, சாம்பார் மசாலா போன்றவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. மூலிகை பொடி வகைகளில் முடக்கற்றான் ரசப்பொடி, பிரண்டை இட்லிப்பொடி, ஹெல்த் மிக்ஸ் பவுடர், டயாகேர் சத்துமாவு, பீட்ரூட் ஊட்டச்சத்து மாவு, முருங்கை சூப் பொடி போன்றவைகளுக்கு நல்ல வரவேற்பு. அழகு சாதனப் பொருட்களில் வாசனை சீயக்காய்த் தூள், மூலிகை ஹேர் ஆயில், முகப்பொலிவு மூலிகை பவுடருக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. எனது சிறப்புத் தயாரிப்பான மருந்து குழம்பு மசாலா, கபப்பொடி, பிரசவ லேகியம் போன்றவைகளுக்கும் தேவைகள் அதிகம் உள்ளது.

இன்றைய நவீன உலகில் உங்கள் ஆரோக்கிய தயாரிப்பு களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

கொரோனா போன்ற இயற்கை மற்றும் நோய்கள் குறித்த பேராபத்துகளுக்கு பிறகு மக்கள் தங்கள் உடல்நலனின் மேல் சீரிய அக்கறை செலுத்த துவங்கி விட்டனர். பலரும் துரித உணவுகளின் மேல் உள்ள பற்றுதலை குறைத்துக்கொண்டு பழைய பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்க முறைகளுக்கு மாறி வருவது மிகவும் நல்ல மாற்றம். இது போன்ற மாறுதல்களால் எனது ஆரோக்கியப் பொருட்களுக்கான வரவேற்பு என்பது மிக அதிகமாக உள்ளது என்பதுதான் களயதார்த்தம். என்னிடம் ஏகப்பட்ட பிரசவ லேகியம் மற்றும் மருந்து பொருட்களுக்கான ஆர்டர்கள் அதிகம் குவிந்துவருகிறது. ஏனென்றால் இதனை இயற்கை முறையில் தயாரிப்பவர்கள் மிகவும் குறைவு. அனைவரும் வேலைக்கு செல்லும் இந்த பரபரப்பான சூழலில் இதற்கான தேவைகளும் அதிகரித்து வருவதும் நிஜம். குழந்தைகளுக்கான சத்துமாவு அதேபோன்று சுகருக்கான டயாகேர் ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கான தேவைகளும் அதிகரித்து விட்டது எனலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எனது சைவ மற்றும் அசைவ தொக்குகள் பெரிதும் கைகொடுக்கின்றது. தற்போது 32 வகை மூலிகைகள் அடங்கிய முக அழகு சாதன பொருட்களுக்கான வரவேற்பும் அதிகரித்தே வருகிறது.

உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து….
முதலில் சமூகவலைத்தளங்கள் மூலம் எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். எனது பொருட்களின் தரம் மற்றும் அதீத சுவையினை உணர்ந்த அவர்களின் வாய்மொழி விளம்பரங்கள் மூலமே தற்போது பல பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களிடமிருந்தும், தமிழகமெங்கும் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகவும் நிறைய வாடிக்கையாளர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். தற்போது என்னிடமிருந்து வாங்கி விற்கும் பல ஏஜெண்டுகள் மூலமாகவும் ஆர்டர்கள் வருகிறது. தமிழகமெங்குமே ஆரோக்கிய பொருட்களுக்கான வரவேற்பு அதிகம் கிடைத்து வருவது எனது தொழிலுக்கு மிகச்சிறந்த ஊக்கமாகவும் ஆக்கமாகவும் இருக்கிறது. எனது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமே எனது தொழிலின் தாரக மந்திரம் மற்றும் மூலதனம்
என்றும் சொல்லலாம்.

தொழிலில் உங்கள் எதிர்கால லட்சியங்கள் ஆசைகள் குறித்து….
தற்போது என்னிடமிருந்து பொருட்களை பல பெண் தொழில் முனைவோர்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். எங்கள் தயாரிப்புகளுக்கும் உதவிக்கென பல பெண்களை பயன்படுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் நிறையபெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும். அதிகளவில் பெண் தொழில்முனைவோர்களைஉருவாக்க வேண்டும். எங்கள் தயாரிப்பு யூனிட்களை இன்னமும் பெரிதுபடுத்தி விரிவாக்கம் செய்யவேண்டும் என்கிற ஆசைகளும் உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பல கடைகளுக்கு எங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் உள்ளது. எங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் ஆசையும் லட்சியங்களும் இருக்கிறது. அதற்கான முழு முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு இத்தொழிலில் பெரிதும் சாதிக்க எனது முழு குடும்பமும் ஒத்துழைப்பையும், ஊக்கத்தினையும் தந்து வருகிறது. மேலும் புதியதான பல ஆரோக்கிய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தி பலரின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது ஆகப்பெரும் லட்சியம் என்கிறார் ஹுதா ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ் உரிமையாளர்
சம்சுல் ஹுதா பானு.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

eighteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi