இந்தியாவில் முதல் முறையாக 1989ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞரால் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரை கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்திய ஒன்றியத்தில் முதல் முறையாக மகளிர் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டம், பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு மகளிர் வாழ்வாதாரத்திற்கான முன்னோடி திட்டமாக இன்றைக்கும் விளங்கி வருகின்றது.
தந்தை பெரியார் தலைமையில் 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானம், பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாடு முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர், 1989ம் ஆண்டு பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு என்கிற வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான சட்டத்தை நிறைவேற்றி தந்தை பெரியாரின் கனவை நனவாக்கினார்.
தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் இந்திய அளவில் தமிழ்நாட்டினை திரும்பி பார்க்க வைத்தது. மகளிருக்கு அதிகாரமளித்தல், சுயமரியாதை உணர்வை மேம்படுத்துதல், உரிமை அளித்தல், சமூக மாற்றத்திற்கான திறனை வளர்த்தல் என சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியும், செயல்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், சுய உதவி குழுக்கள் இயக்கம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், புதுமை பெண் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பில் மகளிர் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மகளிர் தினத்தையொட்டி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் ரூ.3 ஆயிரத்து 19 கோடி கடன் இணைப்புகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 89 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வசதி திட்டத்தை நேற்றைய தினம் தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார்.
இப்படி பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் விடியல் பயணம் முதல் தோழி விடுதிகள் வரை மகளிர்களுக்காக எண்ணற்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி இன்றைக்கு மகளிர் காவலனாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.