டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார். முன்னதாக தேர்தலின்போது மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்று முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளதாவது; “இன்று மகளிர் தினம். இன்று எங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும். இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.