பெண்களை விட ஆண்களுக்குத்தான் இதயம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் உண்டாகும். ஆனால் சமீபகாலமாக பெண்கள் இதயப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பெண் களிடையே ஏற்படும் இறப்புகளில் 35% CVD காரணமாகும். கார்டியோவாஸ்குலர் நோய் என்னும் இருதய நோய்கள் (CVD) ஆண்களுக்கும் பெண்களுக்கும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். இதயநோய் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அளவு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் உண்டாகும். இருப்பினும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான காரணி மனஅழுத்தம், குறிப்பாக பெண்களில். மனஅழுத்தம் மற்றும் மன உளைச்சலுமே பெண்களின் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பெண்களின் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மனஅழுத்தம் முக்கிய பங்கு வகிப்பதையும் அதற்கான தீர்வுகளையும் தருகிறார் பொது
மருத்துவர் டாக்டர். துர்கா தாமோதரன்.
மன அழுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு
*மன அழுத்தத்திற்கு வயது வரம்பு கிடையாது. நவீன வாழ்க்கை முறை மாற்றம்தான் அதற்கு முதற்காரணம்
*பெண்களின் மனஅழுத்தம் பல்வேறு காரணங்களால் உண்டாகின்றன. சமூக அழுத்தம், பதற்றம், குடும்பப் பொறுப்புகளின் அழுத்தம், வேலை அல்லது நிதி அழுத்தம், அல்லது தொடர்ந்து வரும் வாழ்க்கைச் சவால்களால் ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம்.
*உடல் மன அழுத்தத்தை உணரும்போது, அது ‘சண்டை அல்லது வெறுமையான மனநிலையைத் தூண்டுகிறது. இவ்வேளையில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களை வெளியிடு கிறது. இந்த ஹார்மோன்கள் வெளியாகும் தருணத்தில் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, வீக்கம் அதிகரிப்பு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகின்றன.
*காலப்போக்கில், நாள்பட்ட மன அழுத்தம் இருதய அமைப்பில் பாதிப்பையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும். இது இதயத்தின் செயல்பாடுகளில் பிரச்னைகளை உண்டாக்கி, தமனி அடைப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட அபாயப் பிரச்னைகளை உருவாக்கும்.
*பெண்களுக்கு மனஅழுத்தம் குறிப்பாக ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி, ஒன்றன்பின் ஒன்றாக பல உடல் உபாதைகளைக் கொண்டு வரும். இதனால் இதயத்திலும் பிரச்னை உண்டாகும்.
மனஅழுத்த மேலாண்மையின்
முக்கியத்துவம்
*மன அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் இரண்டுக்கும் இடையே உள்ள இணைப்பைக் கருத்தில் கொண்டு, உடல் மட்டுமின்றி மனமும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும். வாழ்வியலில் எவ்வித மாற்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
* உடற்பயிற்சி மற்றும் யோகா: தொடர் உடல் செயல்பாடு மன அழுத்தத்திலிருந்து சரியான நிவாரணம் அளிக்கும். வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் எண்டோர்பின்கள் வெளியாகின்றன, இவை இயற்கையாகவே மனநிலை சீராக இருக்க உதவும். உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். உடற்பயிற்சி மற்றும் யோகா இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
*ஆரோக்கியமான உணவு: மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமச்சீர் மற்றும் சத்தான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் வீக்கத்தைக் குறைக்கவும் இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும். ஆல்கஹால், காஃபின் ஆகியவற்றை கூடுமானவரை குறைத்துக்கொண்டு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
*போதுமான தூக்கம்: மன அழுத்தத்தை சீராக்க மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் கூட போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது. போதுமான தூக்கமின்மை சருமப் பிரச்னைகள், செரிமான பிரச்னைகள் தொடங்கி மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
*நேர மேலாண்மை: காலத்தை சரியாக திட்டமிட்டு செயல்படுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய முக்கியக் காரணம். ஆரம்பத்தில் கிடைத்த நேரங்களையெல்லாம் வீண் செய்துவிட்டு கடைசி நேரத்தில் அத்தனைப் பொறுப்புகளையும் தலையில் சுமக்கும் போதும் கூட மன அழுத்தம் உண்டாக்கும்.
*முன்னுரிமைகளை அமைத்தல்: சற்றும் சிந்திக்காமல் வீட்டு வேலைகளோ, அல்லது பணியிட வேலைகளோ, வேலையைப் பகிர்ந்தளித்து கூட்டாக வேலை செய்ய , அல்லது வேலை வாங்க முயலுங்கள். நாம் இல்லாமல் இங்கே ஒரு அணுவும் அசையாது என்னும் மனநிலை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் அதிகம். அதனாலேயே பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
*சரியான நேரத்தில் பரிசோதனை: குறிப்பிட்ட கால இடைவேளையில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவரின் பரிந்துரைகளைப் பின்பற்றி அவர்களின் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் நல்லது.
திட்டமிட்டு செயல்படுங்கள்
உணவு, வேலை, குடும்பம், சமூகப் பொறுப்புகள் என ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம். எனவே காலத்தையும், நேரத்தையும் திட்டமிட்டு திறம்பட செயலாற்றப் பழகிக்கொள்ளுங்கள். 30 வயதைக் கடந்தாலே எதிலும் ஒரு கட்டுப்பாடும், கவனமும் வேண்டும். முதுகு, தோள்பட்டை, கைகள், தாடைகள் இவற்றில் எங்கேயேனும் வலிகள் உண்டானால் யோசிக்காமல் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.
– ஜாய்
துணித் துணுக்குகள்!
*துணிகள் காய்ந்த உடனே எடுத்து மடித்து வைத்து விட்டால் நீண்ட நாட்கள் உழைக்கும்.
*வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பிறகு சோப்புப் போட்டு துவைக்க சுலபமாக வெளுக்கும்.
*பெட்ஷீட், தலையணை உறைகளை அலசும் நீரில் சில துளிகள் செண்ட் அல்லது யுடிகோலோன் கம்போர்ட், சேர்த்தால் காய்ந்ததும் வாசனையுடன் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
*வண்ணம் மற்றும் புதுத் துணிகளை வெயிலில் அதிக நேரம் உலர்த்துவதைத் தவிர்க்கவும், இல்லையேல் நிறம் மங்கி விடும்.
*எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகளை உட்புறமாக மடித்து ஐயன் செய்ய டிசைன்கள் மங்காமல் பாதுகாக்கப்படும்.
*உப்பு கலந்த நீரில் ஊற வைத்து துணி துவைக்க வாழைக்காய் கறை, இரத்தக் கறை உள்ளிட்ட பல கடினமான கறைகள் நீங்கும்.
*எண்ணெய், கிரீஸ் கறைகள் நீங்க மண்ணெண்ணெய் பயன்படுத்தலாம்.
– இந்திராணி தங்கவேல்