சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுவரை 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை வரும் செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.7 ஆயிரம் கோடியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பபதிவு முகாம்கள் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆக.4ம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆக.5ம் தேதி முதல் ஆக.16ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்பட்டன. இந்த இரண்டு கட்ட முகாம்களை சேர்த்து இதுவரை 1.54 கோடி பேர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பதிவு செய்யாதவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான 3 நாள் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின. முகாம்கள் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு முன்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க தவறியவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியம் தேசிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அந்தவகையில், இத்தகைய குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர் அல்லது தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, அவர்களும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.