சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டப்பணிகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று அமலுக்கு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் கலைஞர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் முகாம்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கு அருகே அமைக்கப்பட்டு குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அதற்கு ஈடாக வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் இரண்டு வெள்ளி மற்றும் கடைசி இரண்டு ஞயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதால் ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.