‘ஓப்பன்ஹெய்மர்’, ‘பார்பி’ என இரண்டு ஆங்கிலப்படங்கள் வெளியாகி, ஒரே நாளில் வசூலில் சக்கைப்போடு போட்டன. இப்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் படம், ‘ஓப்பன்ஹெய்மர்’. ‘பார்பி’யோ பெண் இயக்குநரான கிரேட்டா கெர்விக்கின் படைப்பு. இந்த இரண்டு படங்களில் சத்தமே இல்லாமல் அதிக வசூலைக் குவித்து சாதனை செய்திருக்கிறது ‘பார்பி’. அதாவது, ஆகஸ்ட் 9, 2023ம் தேதி வரையில் ‘பார்பி’யின் உலகளாவிய வசூல், 1.043 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 8,600 கோடி ரூபாய். இதன் மூலம் ஒரு பில்லியன் டாலர் வசூலைக் குவித்த முதல் பெண் இயக்குநர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் கிரேட்டா கெர்விக்.
உலகமெங்கும் திரைப்படத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் திரைப்படத்துறைக்குள் நுழைய விரும்பும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும், நம்பிக்கையாகவும் மாறியிருக்கிறார் கிரேட்டா கெர்விக். மட்டுமல்ல, ஆண்களின் ஆதிக்கம் நிலவும் ஹாலிவுட்டில் ஒரு பெண் இயக்குநரின் படைப்பு இவ்வளவு வசூலைக் குவித்தது அங்கே முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதுவும் முன்னணி இயக்குநரான நோலனின் படத்துடன் போட்டிபோட்டு இந்த வசூலை எட்டியிருக்கிறது, ‘பார்பி’.
இதனால் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகளின் கவனமும் கிரேட்டாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் அட்டைப் படங்களையும் அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டார் கிரேட்டா. யார் இந்த கிரேட்டா கெர்பிக்? நடிகை, திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகங்களைக் கொண்ட ஓர் ஆளுமை, கிரேட்டா கெர்விக். நாற்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தார் கிரேட்டா.
சினிமா பின்புலம் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, சினிமாவில் சாதிக்க வருபவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நாடக ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் கிரேட்டாவின் கனவு. ஆனால், நாடகம் குறித்த படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2006ம் வருடம் ‘லோல்’ எனும் சுயாதீனபடத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். 2010ம் வருடம் வரைக்கும் சுயாதீன படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்குப் பிறகு ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் நோவா பாம்பேக்கின் அறிமுகம் கிடைத்தது. நோவாவின் படங்களில் நடிப்பதோடு, அவருடன் சேர்ந்து திரைக்கதையும் எழுத ஆரம்பித்தார் கிரேட்டா.
குறிப்பாக நோவா இயக்கத்தில் 2012ம் வருடம் வெளியான ‘பிரான்செஸ் ஹா’ எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்; நோவாவுடன் சேர்ந்து திரைக்கதையும் எழுதியிருந்தார் கிரேட்டா. இந்தப் படம் கிரேட்டாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் ஏழு, எட்டு படங்களில் நடித்தார். 2017ம் வருடம் தனியாக திரைக்கதை எழுதி, ‘லேடி பேர்ட்’ என்ற படத்தை இயக்கினார் கிரேட்டா. 10 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 79 மில்லியன் டாலரை அள்ளியது. அடுத்து நாவலைத் தழுவி ‘லிட்டில் வுமன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படமும் வசூலில் சக்கைப்போடு போட்டது. மூன்றாவதாக நோவாவுடன் இணைந்து திரைக்கதை எழுதி, கிரேட்டா இயக்கிய படம்தான் ‘பார்பி’. வசூலில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது இப்படம். தனிப்பட்ட வாழ்க்கையில் பத்து வருடங்களுக்கு மேல் நோவாவுடன் பார்ட்னர்ஷிப் உறவில் இருக்கிறார் கிரேட்டா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அடுத்து ‘ஸ்னோ ஒயிட்’ எனும் படத்துக்குத் திரைக்கதை எழுதி வருகிறார்.
வரலாறுதிரைப்படத்துறையின் ஆரம்ப நாட்களில் நடிப்பைத் தவிர, மற்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இன்று நடிப்பு மட்டுமல்லாமல், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை என திரைப்படத்தின் சகல துறைகளிலும் பங்கு பெறுகின்றனர். ஆவணப்படத்திலும் தங்களுக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டனர். அத்துடன் அவர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆம்; கேன்ஸ், பெர்லின், வெனிஸ் உட்பட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் பெண்கள் பங்களிப்பு செய்த படங்கள் திரையிடப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகிறது. திரைப்படத்துறையில் இவ்வளவு பெரிய இடத்தை பெண்கள் அடைவதற்கு வித்திட்டவர் அலைஸ் கை- பிளாச்சி. ஃபிரான்ஸை சேர்ந்த அலைஸ்தான் முதல் பெண் இயக்குநர். அவருடைய காலத்தில் உலகிலேயே ஒரேயொரு பெண் இயக்குநராக வலம் வந்தவர்.
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாட்களிலேயே ‘காமோண்ட் ஃபிலிம் கம்பெனி’யில் வேலை செய்தார் அலைஸ். 1896ம் வருடம் ஒரு நிமிடம் ஓடக்கூடிய
‘La Fee aux Choux’ என்ற மௌனப் படத்தை எடுத்தார். 1896 முதல் 1906ம் ஆண்டு வரை ‘காமோண்ட்’டின் தயாரிப்புத் துறையில் தலைவராகப் பணிபுரிந்தார் அலைஸ். அவர் பணியிலிருந்த இருபது வருடங்களில் நூற்றுக்கணக்கான மௌனப்படங்களைத் தயாரித்தது ‘காமோண்ட்’. ‘Les Fredaines de Pierrette ’, ‘Esmeralda’ உட்பட ஏராளமான மௌனப்படங்களை இயக்கி, திரைப்படத்துறைக்குள் பெண்கள் நுழைவதற்கான கதவைத் திறந்துவைத்தார் அலைஸ். இவருக்குப் பிறகு ஸ்வீடனைச் சேர்ந்த எம்மா லின்ட்கிவிஸ்ட் இரண்டாம் பெண் இயக்குநராக அறியப்படுகிறார். 1910ம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் எம்மாவின் குறும்படமான, ‘Varmlandingarna’ ஸ்வீடனில் திரையிடப்பட்டது. ஆஸ்திரி யாவைச் சேர்ந்த லூயிஸ் ஃப்ளக்கின் ‘Die Gluckspuppe.’ என்ற மௌனப்படம் 1911ல் வெளியானது. அடுத்து இத்தாலியின் முதல் பெண் இயக்குநரான எல்விரா நோட்டாரி 1911லேயே மூன்று மௌனப்படங்களை இயக்கினார். அலைஸின் வருகைக்குப் பிறகு ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பெண் இயக்குநர்கள் தோன்றிக்கொண்டே இருந்தனர். அது இன்றும் தொடர்கிறது.
– த.சக்திவேல்