பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். எனினும் காலத்தின் கட்டாயம் சில பெண்கள் நன்கு படித்தும்கூட திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். திறமைகள் பல இருந்தாலும் எதையும் செய்ய முடியாமல் தவிக்கும் பெண்களை சமூக வெளிச்சத்திற்கு கொண்டுவர பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மேலும் வீட்டிலிருந்தே சுயதொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு இன்று வரப்பிரசாதமாக பல கடன் உதவிகள், மற்றும் வழிமுறைகள் உள்ளன. என்னென்ன விதமான கடன்கள் உள்ளன. எப்படிப் பெறலாம் எந்தெந்த போலி விளம்பரங்களுக்கு செவிகொடுக்கக் கூடாது விவரமாக விளக்குகிறார் 20 வருடங்கள் நிதிஉதவி சேவையில் அனுபவம் கொண்ட நிபுணர் எம். சந்த்ரு.
அரசு சார் நிதியுதவிகள்!
உத்யோகினி ( Udyogini ) என்ற பெயரில் மத்திய அரசு பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய மத்திய அரசு பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச்சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 மட்டும் திருப்பி செலுத்தினால் போதும். கல்வியறிவு இல்லையென்றாலும் மளிகை கடை, பேக்கரி, ஊறுகாய் தயாரித்தல், வத்தல் தயாரித்தல் போன்ற பணிகளை பெண்கள் செய்துவருகிறார்கள். இவர்களின் சிறு வணிகங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு உத்யோகினி கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 88 சிறு குறு தொழில் வணிக நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடன்களை வழங்குகிறது. ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடன்கள் தொழில் தொடங்கும் பெண்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மானியமாக 1. 50 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.
மகிளா உதயம் நிதி திட்டம்
இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் கீழ் தொழில் முனைவோராக ஆசைப்படும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலைவிரிவுபடுத்தவும், நடைமுறைப்படுத்துவதற்கும் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 10 லட்சம் வரைக் கூடிய இத்திட்டத்தில் கடன் பெற்றுக்கொண்டாலும் 10 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதற்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.
MSME தொழில்கடன்
MSME (Ministry of Micro, Small & Medium Enterprises ) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம். இதுஇந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான உச்ச நிர்வாக அமைப்பாக செயல்படு கிறது. இதில் உங்களின் தொழிலுக்கான உரிமம் துவங்கி கடன் தொகைகள் உட்பட அனைத்தும் பெறலாம். இவைகள் சிறுதொழில்களை ஆண், பெண் என யார் பெயரில் துவங்கினாலும் போதிய சோதனைகளுக்குப் பின் அங்கீகாரமும், உரிமமும் கொடுக்கும். மேலும் MSME உரிமம் கிடைத்தாலே வங்கிகளில் கடன்பெறுவது சுலபம்.
மகளிர் கடன் உதவிகள்
கிராமம், பஞ்சாயத்து, துவங்கி நகர்புறங்களிலும் கூட இன்று பெண்களுக்கு மிகப் பெரிய கொடை இந்த மகளிர் கடன் உதவிகள்தான். அதிலேயே ஏராளமான வகைகளும் உள்ளன. அந்தந்தப் பகுதி பஞ்சாயத்து, ஊராட்சி , கூட்டுறவு வங்கிகள் என நேரில் சென்று விவரங்கள் கேட்டாலே நீங்கள் துவங்கவிருக்கும் தொழிலுக்கு ஏற்ப மகளிர் கடன்களும் கிடைக்கும். சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இன்று மிகப்பெரிய அளவில் சீராக முறைப்படுத்தப்பட்டு கொடுக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பான கடன்களாகவும் மகளிர் கடன் செயல்படுகிறது.
லோன் செயலிகளை நம்ப வேண்டாம்
சமீபத்திய ஆபத்தாக பெண்களை குறி வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த கடன் உதவி செயலிகள். மொபைல் கேம்களுக்கு இடையே, வீடியோக்களுக்கு இடையே வரும் கண்கவர் விளம்பரங்களுக்கு மயங்கி செயலிகளை தரவிறக்கம் செய்து அதில் லோன் பெறுவதைத் தவிர்க்கவும். ஒரு சில செயலிகள்தரவிறக்கம் செய்த மறுகணமே உங்களுக்குக் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வாழ்நாள் முழுமையும் பொறியில் சிக்கியது போல மாற்றிவிடும். எனவே உஷார். ஆனால் ஒரு சில கடன் செயலிகள் சரியான கடன் உதவிகள் கொடுக்கின்றன. அவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலேயே கொடுக்கப்பட்ட ரேட்டிங், பயனாளர் களின் விமர்சனம், அவர்களின் கருத்துகள் என அனைத்தும் படித்து
பயன்படுத்தவும்.
தொழிற் பயிற்சிகள்
தமிழக அரசு மாதந்தோறும் அரசு சார்ந்த தொழில் பயிற்சிகள் பலவற்றையும் இலவசமாகவே கொடுத்து அதிலிருந்து தொழில் துவங்கவும் வழிகள் செய்து தருகிறார்கள். அவற்றில் தையல், அழகுக்கலை, பூ, மாலை கட்டுதல், வேளாண்மை, கூடை முடைதல், எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான தொழில் பயிற்சிகள் ஆண்டு தோறும் கொடுத்துவருகிறார்கள். அருகே இருக்கும் வேளாண்மை அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், தொழில் முகாம்கள் என விசாரித்தாலும் பயன்பெறலாம். கல்வியறிவு குறைவென்றாலும் கூட இப்படியான பயிற்சிகள் மூலம் குறிப்பிட்ட கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு சிறு முதலீட்டில் வருமானம் ஈட்டவும் ஏராளமான வழிகள் உள்ளன. உங்களுக்கென நேரம் ஒதுக்கி பிடித்த பயிற்சிகளைஎடுத்துக்கொண்டு அதில் வருமானம் ஈட்டும்போது வாழ்வாதாரமும் உயரும், உங்களுக்கான மதிப்பும் கூடும்’ தன்னம்பிக்கையாக முடித்தார் சந்த்ரு.
– ஷாலினி நியூட்டன்